நாடே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஓட்டுப் பசியால் அமித் ஷா அலைகிறார் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் பீகாரில் அக்டோபர்,  நவம்பர் மாதங்களில் நடைபெற வேண்டிய சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆன்லைன் மூலம் பிரசாரத்தை பாஜக தொடங்கியது. அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆன்லைன் பிரசாரத்தை சில  தினங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார்.


தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அமித் ஷாவை ராஷ்ட்ரிய ஜனதாதளம் விமர்சித்துவருகிறது. “ பதவிக்காக எப்போதும் குறிவைக்கும் அரசியல் கழுகுகள்” என்று பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் அமித் ஷாவை விமர்சித்துள்ளது.

 
அக்கட்சியின் மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது, “அமித் ஷாவின் முன்னுரிமை எது என்பது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. இந்தியாவே கொரோனா பெருந்தொற்றாலும், இந்தப் பேரிடராலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வெறும் ஓட்டுப்பசியுடன் இருப்பவர்களின் முகத்தை மக்கள் நினைவில் கொள்வார்கள்” என்று விமர்சனம் செய்துள்ளார். இதேபோல அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் அமித் ஷாவை விமர்சித்து கருத்திடப்பட்டுள்ளது.