திருவண்ணமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மநீம பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது, திருவண்ணாமலை திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 


இன்று காலை முதல் சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தாமரை வீடு, அலுவலகம் உள்பட 4 இடங்களில் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சபரீசனின் நண்பர்களான கார்த்திக்(அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மகன்), ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. 

கரூர் ராமேஸ்வரம் பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் காலை 11மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரவக்குறிச்சி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் தாய், தந்தை உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு, ராயனூரில் திமுக மேற்கு நகர செயலாளார் தாரணி சரவணன், செந்தில் பாலாஜி ஆதரவாளர் கொங்கு மெஸ் சுப்ரமணி ஆகியோரது வீடுகளிலும் சோதனை தொடர்ந்து வருகிறது. 

திருவண்ணமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேவனாம்பட்டியில் உள்ள வீட்டில் பறக்கும் படை சோதனை நடத்தி வந்த நிலையில், வருமான வரித்துறையினரும் ரெய்டு நடத்தி வருகின்றனர்.