திருப்பூர் தெற்கு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் அரசு செய்யவில்லை என கூறி, அதிமுக எம்எல்ஏ குணசேகரன் இன்று காலை திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் செல்போனில் அழைப்பு வந்ததும், போராட்டத்தை கைவிட்டார். அவரது அரசியல் ஸ்டன்ட் முடிவுக்கு வந்தது.

திருப்பூர் குமரன் நினைவகம் அருகே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ குணசேகரன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், எவ்வளவு வலியுறுத்தியும், அரசு சார்ப்பில் அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என தனி மனிதனாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

சிறிது நேரத்தில் அவருக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்தது. அதன்பின்னர், தனது கோரிக்கையை அரசு ஏற்று கொண்டதாகவும், உண்ணாவிரதத்தை முடித்து கொண்டதாகவும் கூறினார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எம்எல்ஏ குணசேகரனை, அதிமுக அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை. இதனால், தற்போது அவர் உண்ணாவிரதம் இருந்தார்.

மக்களின் அடிப்படை வசதிக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கும் அவர், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்தான். அவர், முதலமைச்சரை நேரில் சந்தித்து தனது தொகுதிக்கான நிதியை பெறலாம். அவர் அதை ஏன் செய்யவில்லை.

மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி வைத்து, வெளியில் சொல்ல முடியாத தனது கோரிக்கையை நிறைவேற்ற நினைக்கிறார். இதனால், உண்ணாவிரதம் இருந்த அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதன்பின்னர், தனது போராட்டத்தை முடித்து கொண்டார்.

எம்எல்ஏ குணசேகரனின் இந்த திடீர் போராட்டம், அணி மாறுவதாக மறைமுகமாக ஆளுங்கட்சிக்கு அவர் மிரட்டல் விடுப்பதுபோல் எங்களுக்கு தோன்றுகிறது என்றனர்.