மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன மதுரப்பாக்கத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் என்பவருக்கு கீதா என்ற மனைவியும் , நந்தினி, நதியா, தீபா என்ற மூன்று மகள்களும், தீனா என்ற ஒரு மகனும் உள்ளார். நந்தினி 11ம் வகுப்பும், தீபா நான்காம் வகுப்பும் படித்து வந்தனர். கோவிந்தராஜ் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இவரது தொல்லை தாங்காமல் இவரது மகள் நதியா கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இரு மகள்கள், மகன் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில், மகள்கள் தீபா, நந்தினி மட்டும் மதியம் வீட்டிற்கு வந்தனர். அப்போது கோவிந்தராஜ் வீட்டுக்குள் மது அருந்தினார். மகள்கள் இதை தட்டி கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த அவர் மரக்கட்டையால் இரு மகள்களையும் தாக்கியுள்ளார்.

இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து போதை தெளிந்ததும் கோவிந்தராஜ் ஒரகடம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், திருப்பெரும்புதூரை அடுத்த சின்ன மதுரப்பாக்கத்தில் குடிபோதையில் தந்தையே இரு மகள்களை உடுட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மது எவ்வளவு மோசமானது. அழகான குடும்பங்களை அது எவ்வாறு சீரழிக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு தான் எடுத்துக்காட்டு ஆகும்.

Scroll to load tweet…

குடும்பத்தலைவரின் குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் சீரழிவதற்கு இது மட்டுமே ஒற்றை எடுத்துக்காட்டு அல்ல. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு குடும்பம் மதுவால் சீரழிந்து கொண்டு தான் இருக்கிறது. குடியால் குழந்தைகளின் உணவு, கல்வி, எதிர்காலம் பறிக்கப்படுகின்றன. தமிழக அரசின் டாஸ்மாக் வருமான உயர்வும், குடும்பங்களின் மகிழ்ச்சியும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. மது வருமானம் உயர, உயர ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சீரழிவது அதிகரிக்கும். இந்த உண்மையை தெரியாதது போலவே தமிழக அரசு நடந்து கொள்ளக் கூடாது. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தமது நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதை செயல்படுத்துவதற்காக நேரம் வந்து விட்டது. எனவே, இனியும் தாமதிக்காமல் மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.