பொன்னேரி அருகே இலவச பஸ் பாஸ் டிக்கெட் பரிசோதகரால் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இலவச பஸ் பாஸ் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி அரசு கல்லூரியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் மூலமாக பேருந்துகளில் வந்து செல்கின்றனர். இன்று காலை வழக்கம் போல செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற தடம் எண் 558B பேருந்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். பேருந்து சோழவரம் வந்த போது டிக்கெட் பரிசோதகர் மாணவர்களின் இலவச பஸ் பாஸை பரிசோதித்து விழுப்புரம் கோட்ட பேருந்துகளில் மட்டுமே இந்த இலவச பஸ் பாஸ் செல்லும் எனவும். மாநகர பேருந்துகளில் பயணிக்க செல்லாது என கூறி அவற்றை பறிமுதல் செய்து மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் 27ரூபாய் கட்டணம் பெற்று கொண்டு டிக்கட் வழங்கியுள்ளார்.

மாணவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட இலவச பஸ் பாஸை மீண்டும் மாணவர்களிடம் திரும்ப வழங்காமல் டிக்கெட் பரிசோதகர் பேருந்தில் இருந்து இறங்கி சென்று விட்டார். பொன்னேரி பேருந்து நிலையத்தை அடைந்தவுடன் மாணவர்கள் தாங்கள் வந்த பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது மார்கத்தில் விழுப்புரம் கோட்ட பேருந்துகளின் எண்ணிக்கையை விட மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் இதில் பயணிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இலவச பஸ் பாஸை திரும்ப வழங்க வேண்டும், தேர்வு நேரத்தில் தங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய டிக்கட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

 

மேலும் நேரக்காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் அங்கிருந்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இலவச பஸ் பாஸை திரும்ப ஒப்படைத்து, டிக்கட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.