Asianet News Tamil

அநியாயத்திலும் அநியாயம்.. பாஜக ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துக்கு மூன்று விலைகள்.. கொதிக்கும் ஸ்டாலின்..!

இந்தளவுக்கு மோசமான சூழ்நிலை இருக்கும் போது, தடுப்பூசியின் விலையை உயர்த்துகிறார்கள் என்றால் எவ்வளவு அநியாயம் இது! மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்பது அநியாயத்திலும் அநியாயம் இல்லையா? உயிர் அனை வருக்கும் பொதுவானது தானே? ‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே ரேசன் கார்டு; ஒரே வரி; ஒரே சந்தை; ஒரே மதம்; ஒரே உணவு; ஒரே மொழி’ - என்று பேசும் பா.ஜ.க. ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துக்கு மூன்று விலைகள்!

Three prices for life-saving medicine in BJP regime .. MK Stalin condemnation
Author
Tamil Nadu, First Published Apr 28, 2021, 9:55 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஒரே நாடு ஒரே மொழி என பேசும் பாஜக ஆட்சியில் தடுப்பூசிக்கு மட்டும் 3 வகையான விலை விதிக்கப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின்  விமர்சனம் செய்துள்ளார். 

கொரோனா பரவி வரும் நிலையில் நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும் தங்களது சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் வைத்துக் கொள்கிறேன். மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். அவசியப் பணிகளுக்காக மட்டும், அதற்கான இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருங்கள். வீட்டில் இருந்து வேலைப் பாருங்கள். வீட்டுக்குள்ளும் போதிய தனிமனித இடைவெளியைக் கடைபிடியுங்கள்.

தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள். மிகத்தீவிரமான உடல்நலக் கோளாறு உள்ளவர்கள் தங்களது மருத்துவரை கலந்தாலோசனை செய்த பிறகு தடுப்பூசியை பயன்படுத்துங்கள். முகக் கவசங்களை தொடர்ந்து அணியுங்கள். கிருமிநாசினியை பயன்படுத்துங்கள். கபசுரக் குடிநீர் அருந்துங்கள். காய்கறி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்துங்கள். பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். சத்தான, இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட பொருள்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

மருந்தால் மட்டுமல்ல, உணவுப் பொருளாலும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட பலவற்றையும் நமது உணவுடன் சேர்த்து பயன்படுத்தும் பழக்கம் காலம் காலமாக நம்மிடம் இருக்கிறது. அந்த பாரம்பர்யத்தை தொடந்து பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம். 

நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியம் மட்டும் யாருக்கும் எப்போதும் வேண்டாம்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகமிக மோசமானதாக பரவி வருகிறது. “கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும்” என்று வருகின்ற செய்திகள் அச்சத்தை தருவதாக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தினந்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களுமே கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. ஒரு நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகில் முதல் நாடாக இருக்கிறது. வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் நமது பயத்தை அதிகம் ஆக்குக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மருந்துகள் இல்லை. ஆக்சிஜன் இல்லை. தடுப்பூசி இல்லை. இப்படி இல்லை, இல்லை என்பதே வட மாநிலச் செய்திகளாக இருக்கின்றன.

முதல் அலை பரவிய போது அதை தடுக்கத் தவறியது மத்திய - மாநில அரசுகள்.  அந்தப் பரவலைக் கட்டுப்படுத்தவும் அந்த இரண்டு அரசுகளும் தவறியது. முதல் தவறையாவது திருத்திக் கொண்டு அதிலிருந்து ஏதாவது பாடம் கற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை. முதல் தவறை விட பெரிதாக இரண்டாவது தவறைச் செய்துவிட்டார்கள். முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எந்த தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மத்திய - மாநில அரசுகள் எடுக்கவில்லை. அதன் விளைவைத் தான் நாம் கண்ணுக்கு முன்னால் இப்போது பார்க்கிறோம். ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக் குழு எச்சரித்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த அறிக்கை பிப்ரவரி 2-ஆம் தேதி மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது அலை நாட்டு மக்களை தாக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் கூட தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆக்சிஜனையும் வெளிநாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்திருக்கிறது. தடுப்பூசியை வைத்து நடந்த கொள்ளைகள் தான் இந்த வேதனையான நேரத்தில் மேலும் துயரமான ஒன்றாகும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை உணர்ந்த டெல்லி உயர்நீதிமன்றம், ''மனித உயிர்கள் முக்கியமில்லையா? பிச்சை எடுங்கள்... கடன் வாங்குங்கள்... திருடக் கூட செய்யுங்கள்... இது தேசத்தின் அவசர நிலைக் காலம். ஆக்சிஜன் கொண்டு வந்து மக்களை காப்பாற்றுங்கள்" என்று மத்திய அரசைப் பார்த்து கூறியிருக்கிறது. ஆக்சிஜன் தர மறுக்கும் நிறுவனங்களை கையகப்படுத்தலாம் என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தளவுக்கு மோசமான சூழ்நிலை இருக்கும் போது, தடுப்பூசியின் விலையை உயர்த்துகிறார்கள் என்றால் எவ்வளவு அநியாயம் இது! மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்பது அநியாயத்திலும் அநியாயம் இல்லையா? உயிர் அனை வருக்கும் பொதுவானது தானே? ‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே ரேசன் கார்டு; ஒரே வரி; ஒரே சந்தை; ஒரே மதம்; ஒரே உணவு; ஒரே மொழி’ - என்று பேசும் பா.ஜ.க. ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துக்கு மூன்று விலைகள்!

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்த பிறகு மாநில அரசுகள் தங்களிடம் இருந்த வரி போடுகிற அதிகாரங்களையும் பெருமளவிற்கு இழந்து விட்டன. எனவே இந்தச் சுமையை மாநில அரசுகள் சுமப்பது மிகக் கடினம். எனவே இந்தக் கடினமான காலத்தை சமாளிக்க, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, முக்கியமாக “அனைவருக்கும் இலவச தடுப்பூசி” என்ற அறிவிப்பை பிரதமர் அறிவித்து, உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் காலம் காலமாக மருத்துவ உள்கட்டமைப்பு வசதி வளப்படுத்தப்பட்டு வருவதால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. ஆனாலும் அ.தி.மு.க. அரசு இதனை முறையாகப் பயன்படுத்தும் திறன் பெற்றதாக இல்லை.

வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிப்பதற்காக மட்டும் திறக்கலாம். நான்கு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்ததும் ஆலையை நிரந்தரமாக மூடி விடலாம் என்று மனிதாபிமான அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சொன்னோம். அப்படி தயாரிக்கப்படுகின்ற ஆக்சிஜனையும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி சொல்லி இருக்கிறோம். மக்கள் மிகவும் எச்சரிக்கையாக தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. தனிமனித இடைவெளிய கடைப்பிடிக்கவில்லை என்றால் ஒருவர் மூலமாக ஒரு மாதத்தில் 406 பேருக்கு கொரோனா தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய மக்கள் நலவாழ்வுத்துறை சொல்லியிருக்கிறது. இதையெல்லாம் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்கும், எப்போதும், எந்த இடத்திலும் தனிமனித இடைவெளி முக்கியம், மிக மிக முக்கியம் என்பதை மக்கள் தங்களுடைய மனதில் அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அரசுத் தரப்பில் அவசரமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியைப் புதிதாக உருவாக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்ட 'தற்காலிக மருத்துவமனைகள்' அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செயய்ய வேண்டும். கொரோனா பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். மாஸ்க் அணிவதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் பரிசோதனை - அனைவருக்கும் தடுப்பூசி என்பதை இயக்கமாக மாற்ற வேண்டும்.

 

ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக் கூடாது - தொற்று ஏற்பட்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் ஆகிய இரண்டு முக்கிய இலக்கை கொண்டதாக அந்த இயக்கம் செயல்பட வேண்டும். இவற்றையெல்லாம் இப்போது இருக்கும் அரசு செயல்படுத்துகிறதோ இல்லையோ, விரைவில் புதிதாக அமைய போகிற நமது கழக அரசு நிச்சயமாக நிறைவேற்றும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுடைய அமைதியான வாழ்விற்கும் தேவையான அனைத்தையும் அமைய போகிற கழக அரசு செய்யும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அதுவரை தற்போதைய காபந்து அரசு மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம், அலட்சியம் வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களைக் காப்பாற்றுங்கள், மக்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். வரலாற்றின் பழிக்கு ஆளாகாதீர்கள், ஆளாகாதீர்கள் என்று எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் நலன் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும். எப்போதும் மக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios