இடைத்தேர்தல் முடிவுகள் தந்த சாதகமான சூழலை பயன்படுத்திக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலை மட்டும் அல்ல சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராக எடப்பாடி தரப்பு வியூகம் வகுத்து வருகிறது.

ஆர்.கே.நகர் படுதோல்வி, நாடாளுமன்ற தேர்தல் அவமானம், வேலூரில் வெற்றி வாய்ப்பை இழந்தது போன்ற காரணங்கள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸின் தலைமை மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி அவர்கள் இருவருக்கும் மட்டும் அல்லாமல் அதிமுக எனும் கட்சிக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் வெற்றி என்பது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு கிடைத்தது போன்ற எளிதான வெற்றியை சட்டமன்ற தேர்தலில் கொடுத்துவிடாது என்பதை கூறும் வகையில் இருக்கிறது. மேலும் அதிமுகவில் எடப்பாடி தரப்புக்கான பிடியை மேலும் அதிகரித்துள்ளது. ஆர்.கே.நகரில் கிடைக்காத வெற்றி, வேலூரில் கிடைக்காத வெற்றி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் சாத்தியமானது எப்படி என்கிற கேள்விக்கு எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு தான் காரணம் என்கிறார்கள் அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள். உடுமலை ராதாகிருஷ்ணனுடன் மோதிய அமைச்சர் மணிகண்டனை பதவியை விட்டு தூக்கி அடித்தார் எடப்பாடி. முதலமைச்சராக அவர் பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் பதவி நீக்கம் அது.

ஆர்.கே.நகர் தோல்வியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் தோல்வியாக இருந்தாலும் சரி வேலூர் தோல்வியாக இருந்தாலும் சரி, அவற்றுக்கு எல்லாம் காரணம் அமைச்சர்கள் மேலிடம் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்யவில்லை என்பது தான் உளவுத்துறை ரிப்போர்ட். அதே சமயம் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் கிடைத்த வெற்றிக்கு காரணம் ஜெயலலிதா  இருந்த போது அமைச்சர்கள் செய்யும் தேர்தல் பணி அப்படியே நடைபெற்றது தான்.

இது எல்லாம் எப்படி நடந்தது என்றால்? அமைச்சர் மணிகண்டனை போல் நாமும் பதவி நீக்கப்படலாம் என்கிற அமைச்சர்களின் பயம் தான் என்கிறார்கள். மேலும் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் கொடுத்த வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அமைச்சர்கள் களமாடியதே அதிமுக தரப்புக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அமைச்சர்கள் ஆறு பேர் எடப்பாடியின் அதிருப்தி ரேடாரில் இருந்தனர். ஆனால் அவர்களில் மூவர் இடைத்தேர்தலில் தங்கள் திறமையை காட்டியுள்ளனர்.

ஆனால் மேலும் 3 அமைச்சர்கள் தொடர்ந்து அதிருப்தி ரேடாரிலேயே இருப்பதாக எடப்பாடி தரப்பு கருதுகிறது. அவர்களை தூக்கிவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் ஜெயலலிதா இருந்த போது இருந்த கட்சியின் நிலையை மீண்டும் கொண்டு வந்துவிடலாம் என்று நம்புகிறார்கள். இதனால் அந்த மூன்று அமைச்சர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனராம்.