பஞ்சாபில் இது போன்ற ஆர்ப்பாட்டம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், பிரதமர் மோடி செல்லும் பாதையில் நடக்க இருந்த போராட்டத்தை அரசால் கண்டுபிடிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்பதை நம்பத்தான் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மோடி இந்தப் பாதையைப் பயன்படுத்த போவது மாநில அரசுக்கு மட்டுமே தெரியும், அது எப்படி போராட்டக்கார்களுக்குத் தெரிந்தது.

பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக ஒட்டுமொத்தமாக பஞ்சாப் முதல்வர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும், அப்போது மட்டுமே இதில் நடந்த தவறை கண்டறிய முடியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்புக்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடியின் பயணம் பாதுகாப்பு குறைபாடுகளால் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘ஒரே நாடு’ என்ற கட்சி பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், “பஞ்சாபில் இருக்கும் ஹுசைன்வாலா என்ற பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மோடியின் பயணம், பஞ்சாப் மாநில அரசின் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக நிறுத்தப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பாரதப் பிரதமர் தன் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பும் சூழ்நிலை உருவானது.

பிரதமர் கலந்து கொள்ளவிருந்த தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் இருந்து 30 கிமீ தூரம் முன்பு இருந்த பாலத்தில் பிரதமர் மோடியின் வாகனத்தொகுப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. பாலத்தின் மறு முனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், உண்மையில் இந்த திடீர் ஆர்ப்பாட்டம் யார் மூலம் நடத்தப்பட்டது என்ற குழப்பம் இப்போதுவரை நிலவி வருகிறது. அதிலும் பிரதமரின் கார் பாலத்தில் முடங்கியபோது, அவரின் காரை நோக்கி மஞ்சள் நிற பஸ் ஒன்றும் வந்து இருக்கிறது. அந்த வாகனத்தின் உள்ளே ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. உடனே Special Protection Group (SPG)எஸ்.பி.ஜி படையினர், பிரதமர் மோடி அவர்களின் காரை சுற்றி நின்று தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். 

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கவும், தடுக்கவும் வேண்டிய பஞ்சாப் மாநில காவல் துறை, கையாலாகாமல் காட்சியளித்தனர். ஆகவே மாநில அரசின், காவல் துறையின் பாதுகாப்பு குறைபாடுகளால் மோடியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. நம் நாட்டில் மாநில அரசின் மெத்தனத்தால், அம்மாநில காவல்துறையின் அலட்சியத்தால், இந்தியப் பிரதமரின் வாகனத் தொகுப்புக்குக் கொடுக்கப்பட்ட மிக மோசமான பாதுகாப்பு இதுதான். இவ்வளவு குழப்பங்கள் இருக்க, உண்மையில் யார்தான் வேலையைச் சரிவர செய்யாமல் இருந்தது? பிரதமரின் பாதுகாப்பிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் என்ன? அதில் எது சம்பவத்தில் குறைந்தது?

திடீரென்று ஒரு மாநில உளவுத்துறையும், காவல்துறையும், அம்மாநிலத்திற்கு பிரதமரின் வருகையின்போது, ஒத்துழைக்காமல் போனால் என்ன ஆகும் என்பதற்கான மோசமான உதாரணமாக பிரதமரின் இப்பயணம் நிகழ்ந்துள்ளது. நாட்டின் பிரதமரின் பயணத்தில், சாலைப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போராட்டம், ஆர்ப்பாட்டம், சதித்திட்டம், உளவு, ஆகிய முக்கியமான பொறுப்புக்கள் மாநிலக் காவல் துறையின் வசம் உள்ளது. இதுவரை எதிர்க் கட்சிகள் ஆட்சி செய்த எந்த மாநிலத்திலும் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதே இல்லை. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் நாட்டுக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடிகள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.

ஏன் என்றால், பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்பை எஸ்பிஜி படைதான் உறுதி செய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் சாலை போக்குவரத்தின் போது அந்தப் பாதையில் பாதுகாப்பை மாநில போலீஸ்தான் உறுதி செய்ய வேண்டும். பிரதமர் செல்லத் திட்டமிடப்பட்டுள்ள பாதையில், பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, எந்தத் தடையும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்த்து அதை SPG யுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதாவது பிரதமரின் பயணத்தில் கடக்கும் பாதையை பாதுகாப்பாக வைத்திருப்பது மாநில காவல்துறையின் பொறுப்பாகும். அதைச் செய்யத் தவறிய காங்கிரஸ் அரசு, மன்னிக்க முடியாத வரலாற்றுப் பெரும் பிழையைச் செய்துள்ளது.

மாநில காவல்துறை என்பது, அவசர நேரத்தில், எதிர்பாராவிதமாக திடீரென மாற்றப்படும் பயண வழியைத் தயார்படுத்துவது மட்டுமல்லாமல், டிஜிபி அல்லது அப்பொறுப்பிற்கு இணையான ஒரு அதிகாரி பிரதமரின் வாகனத்தொகுப்பில் பயணிக்க வேண்டும். இது நடக்கவில்லை. "ஹெலிகாப்டரில் செல்ல முடியாது, ஆகவே பிரதமர் மோடி சாலை வழியாக வருகிறார் என்றதும், உடனே பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் அரசு மாற்று திட்டப்படி கூடுதல் படைகளைக் குவித்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. ஹெலிகாப்டரில் செல்ல பிரதமர் திட்டமிடப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் ஒரு மாற்றுச் சாலை வழி தயாராக வைக்கப்பட்டு, பாதையில் போலீசாரை நிறுத்தி, வரிசைப்படுத்துவது, பிரதமரின் வருகைக்கு குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே, விமான நிலையத்தில் இருந்து சென்றடையும் இடம் வரை முழு ஒத்திகை நடத்தப்பட வேண்டும். இதுவும் நடந்ததா என்பதற்குத் தகவல் இல்லை.

பஞ்சாபில் இது போன்ற ஆர்ப்பாட்டம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், பிரதமர் மோடி செல்லும் பாதையில் நடக்க இருந்த போராட்டத்தை அரசால் கண்டுபிடிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்பதை நம்பத்தான் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மோடி இந்தப் பாதையைப் பயன்படுத்த போவது மாநில அரசுக்கு மட்டுமே தெரியும், அது எப்படி போராட்டக்கார்களுக்குத் தெரிந்தது. இதனால் இந்த சம்பவத்தில் மாநில அரசின் அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது. அதுபோக போராடியவர்கள் யார் என்ற விளக்கமும் மாநில அரசால் தரப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பஞ்சாப் முதல்வர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும், அப்போது மட்டுமே இதில் நடந்த தவறை கண்டறிய முடியும்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.