நீதிமன்றம் மூலம் ஏலம் விடப்பட்ட குடியிருப்பை காலி செய்வது தொடர்பான பிரச்சனையில் தலையிட்டு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பி.கே சேகர்பாபு உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சென்னை பெரியமேடு பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் ஜெயின். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுத்த ஏலத்தின் மூலம் சவுக்கார்பேட்டை மிண்ட் தெருவில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பை 2018-ம் ஆண்டு வாங்கியுள்ளார். அந்த இடத்தில் 12 நபர்களுக்கு ரூபாய் 25 லட்சம் கொடுத்து காலி செய்ய வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தில் கடை நடத்தி வந்த கண்பத் லால் என்பவர் மட்டும் பணத்தை பெற்றுக் கொண்டு, கடையை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். மேலும், அவர் கடையை பூட்டி விட்டுச் சென்றதால், இருவருக்குமிடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது. 

இதனிடையே, நீதிமன்றத்தில் ராஜ்குமார் ஜெயின் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ' வீட்டைக் காலி செய்யும் பிரச்சனை தொடர்பாக, சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ சேகர் பாபு அலுவலகத்தில், கட்டப்பஞ்சாயத்து நடந்ததாகவும், அங்கு தன்னை சேகர்பாபு உட்பட 8 பேர் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் 35 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளதாகக் கூறி அவர்களிடம் தந்துவிட்டுச் சென்றதாகவும், ஆனால் மீதமுள்ள 65 லட்ச ரூபாயை கொடுக்குமாறு தொடர்ந்து மிரட்டி வருவதாக முறையிட்டுள்ளார். இதனையடுத்து, சேகர்பாபு உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.