இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்தாலும் நம் இதயத்தை விட்டு அகலாமல் ஒவ்வொரு கணமும் நம்மை வழி நடத்தி வருபவர். சோதனை நெருப்பாறுகளை கடந்து நெஞ்சு நிமிர்த்தி நான் பயணிப்பதற்கான துணிச்சலை நமக்கு தந்து கொண்டிருப்பதும் நமக்குள் இருந்து இயங்கும் ஜெயலலிதா எனும் அற்புத சக்திதான். உலகமே போற்றுகிற பல திட்டங்களை ஏழை எளிய மக்களின் உயர்வுக்காக செயல்படுத்திய தங்கதாரகை. அவர்களது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே தீய சக்திகளை குலைநடுங்க செய்தவர். தன் வாழ்வையே வேள்வியாக மாற்றி தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக அர்ப்பணித்து அரும்பெரும் தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் உருவாக்கிய எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் இரும்பு பெண்மணியாக நின்று காப்பாற்றினர் சசிகலா. 
எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதா காத்துநின்ற இயக்கம் திசைமாறி மாலுமி இல்லாத கப்பல் ஆக நமது தனித்தன்மையை இழந்து தத்தளித்தது இருக்கிறது. ஆட்சி அதிகாரம் இருப்பதால் மட்டுமே தங்களோடு ஒட்டிக் கொண்டு இருப்பவர்களை எல்லாம் வைத்துக் கொண்டுதானே பெரிய ஆளுமை என தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள். எதிரிகளுக்கு எப்போதும் அச்சம் தரும் அசலான வீரபாகு அட்டைக்கத்தி ஒருபோதும் ஈடாக முடியாது என்பது தெரியாமல் அர்த்த ராத்திரியில் குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 2011ம் ஆண்டு தேர்தலில் பண மூட்டைகளை நம்பி களமிறங்கிய திமுகவிற்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன பதில் கொடுத்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
அந்த தேர்தல் களத்தில் தொண்டர் படையின் சக்தியும் மக்களின் ஆதரவும் கொண்டு தீய சக்தி கூட்டத்தை நம்முடைய ஜெயலலிதா விரித்துக் காட்டினார்கள். 2016ம் ஆண்டிலும் திரும்பவும் எழுந்திருக்க முடியாத அடியை அவர்களுக்குக் கொடுத்தார்கள். அம்மா அவர்கள் இல்லாத 2021 தேர்தல் களத்தில் எப்படியாவது தங்களின் ஈனக் கனவை நனவாக்கி விட வேண்டுமென்று தீயசக்தி கூட்டம் இன்றைக்கும் துடித்துக் கொண்டிருக்கிறது. அதை முறியடிப்பதற்கான ஆற்றலும் எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிற தொண்டர் படையின் எழுச்சி மிகுந்த இளைஞர் பட்டாளம் நம்மிடம்தான் இருக்கின்றன.


அவற்றைக்கொண்டு இந்த மண்ணில் திமுக எனும் தீயசக்தி கூட்டம் தலை எடுப்பதை தீர தீர வேண்டிய பெரும் பொறுப்பையும் கடமையையும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களான நம்முடைய காலம் வழங்கியிருக்கிறது. 10 ஆண்டுகளாக பதவி இல்லாமல் காய்ந்து போய் மக்களின் மீது பாய்வதற்கு தயாராகி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊருக்கு ஊர் எதையெல்லாம் அவர்கள் என்னென்ன அட்டூழியங்களை அரங்கேற்றுவார்கள், சாதாரண மக்களை நிம்மதி எப்படி எல்லாம் குறைந்து போகும் என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. இவர்கள் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். இன்னாருக்கு இன்னார் என்று திட்டமிட்டு உருவாக்கப்படும் மாயத் தோற்றங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் அடித்து நொறுக்க போகிறார்கள்.
அடுத்தடுத்து செய்ய வேண்டியவை எக்காரணம் கொண்டும் தீயசக்தி கூட்டம் அதிகாரத்திற்கு வந்து விடாமல் தடுப்பதற்கான உத்திகள், மக்களுக்கும் வாக்குறுதிகள், வேட்பாளர் தேர்வு என சட்டப்பேரவை தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் நாம் முழு கவனம் செலுத்தி வருகிறோம். ஜெயலலிதா வளர்த்த சிங்க குட்டிகளாக இனி வரும் நாட்களில் களத்தில் சுற்றுசூழலை போகிறோம். ஜெயலலிதாவின் பெருமைகளை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் கம்பீரமான ஆட்சியை தமிழக மக்களின் பேராதரவுடன் உண்மையான பிள்ளைகளான நாம் தான் அமைக்கப் போகிறோம். அதற்காக ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5-ஆம் தேதி இதய பூர்வமாக அஞ்சலி செலுத்தி நாம் ஒவ்வொருவரும் மனதார உறுதி ஏற்போம். நாளைய சரித்திரம் பேசப்போகும் நமது வெற்றியை 2021இல் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங்கிட சபதம் ஏற்போம்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.