தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தெள்ளத் தெளிவாக தேங்காய் உடைப்பது போல தனது கருத்தை தெரிவித்து விட்டார் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்த தோப்பு என்.டி.வெங்கடாசலம். 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்திற்கு பதிலாக  பவானி தொகுதியில் போட்டியிட்ட கே.சி.கருப்பணனுக்கு சுற்றுச் சூழல் அமைச்சர் பதவியை கொடுத்து விட்டார் ஜெயலலிதா. அப்போதிலிருந்தே கடும் அப்செட்டில் இருந்தவர் தான் தோப்பு வெங்கடாசலம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவிடம் கட்சி சென்றது. அப்போது வெங்கடாசலத்தின் கோவை ராவணன் மீண்டும் அமைச்சர் பதவி பெற்று தருவதாக உறுதி அளித்திருந்தாராம். 

ஆனால், கூவத்தூர் கும்மாளங்களுக்குப் பிறகு ஒட்டு மொத்த அரசியல் காட்சிகளும் மாறியது அனைவரும் அறிந்ததே. இதில் பாஜகவின் கைங்கர்யங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகியோரின் சாதுர்யங்களால் ஆட்சியை கடப்பாறையை விட்டு நெம்பினாலும் அசைக்க முடியாத அளவிற்கு இறுகித்தான் போனார்கள். இதனால் எதிர்ப்பாளர்கள் தங்கள் மனக்குமுறல்களைக் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள். 

இந்த வகையில் தான் தினகரன் அணிக்கு போகலாமா? எம்.எல்.ஏ பதவியையே ராஜினாமா செய்து விடலாம் என்கிற யோசனையோடு கடைசி நேரத்தில் தான் ஓட்டெடுப்பில் பங்கு கொண்டார். அந்த அளவிற்கு தோப்பு வெங்கடாசலம் ஆரம்ப நாள் முதலே மன உளைச்சலில் இருந்து வந்தார் என்பது தெள்ளத் தெளிவு. தற்போது அதிமுக தலைமையிலான முன்றாமாண்டு முடிந்து நான்காமாண்டு தொடங்க உள்ள நிலையில், போர்க்கொடி தூக்கியுள்ளார் தோப்பு வெங்கடாசலம். தனக்கு வழங்கப்பட்ட கட்சி பொறுப்புகள் அனைத்தையும் துறந்து அடிமட்டத் தொண்டனாக மட்டுமே செயல்படப்போவதாக அறிவித்துள்ளார். 

இதனால் அதிமுக உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆடிப்போயுள்ளனர். பொதுவாக கட்சியில் இருந்து வெளியேறுபவர்கள் படிப்படியாக செய்யும் வேலைகளில் முதல் வேலையை செய்ய தொடங்கி உள்ளார். அதாவது, தனது மிரட்டலுக்கு கட்சி தலைமை அடிபணிகிறதா என்று பார்ப்பது.. இல்லையென்றால் அடுத்த கட்ட நகர்த்தலை கட்சி தலைமைக்கு உணர்த்துவது என்பதாகும். 

இதன் தொடர்ச்சியாகத்தான் தோப்பு வெங்கடாசலத்தோடு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சுப்பிரமணி, பவானி சாகர் எம்.எல்.ஏ ஈஸ்வரன் ஆகிய இருவரும் கைகோர்க்கப்போகிறார்கள் என்கிற செய்தி ஆளும் அதிமுகவை கிறுகிறுக்க வைத்துள்ளதாம்.