மக்கள் பிரச்சனையை பார்க்காமல், ஆட்சியை பிடிப்பதில் மட்டும் அமைச்சர்கள் குறியாக இருக்கிறார்கள் என டிடிவி.தினகரன் ஆதரவாளர் தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ, செய்தியாளர்களிடம் கூறினார். அவர் அளித்த பேட்டி.

டிடிவி.தினகரன், அதிமுகவில் பொறுப்பாளர்களை நியமித்து பட்டியல் வெளியிட்டார். அதற்கு காரணம், வரும் உள்ளாட்சி தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் அதிமுகவினர் திடமாக சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்பதே.

தற்போது, டிடிவி.தினகரன் பட்டியலிட்டு உள்ளவர்களின் பதவிகள் செல்லாது என அமைச்சர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், அவர்களது ஆதரவு அமைச்சர்களுக்கு தேவையில்லையா. அதையும் அவர்கள் வெளிப்படையாக சொல்லட்டும். அதை சொல்ல முடியுமா..?

டிடிவி.தினகரன் பொறுப்பாளர்களை நியமிக்க அதிகாரம் இல்லை என முதலமைச்சர், அமைச்சர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், பொது செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தவர்கள் இவர்கள் தான். இவர்கள்தான் முதலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல் சசிகலா, டிடிவி.தினகரனை துணை பொது செயலாளராக நியமித்தவுடன், இதே அமைச்சர்கள்தான் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதை அப்போதே சொல்லி இருக்கலாமே. ஏன் சொல்லவில்லை.?

அமைச்சர்கள் தன்னிச்சையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் என நான் கூறவில்லை. அவர்களது கருத்தை யோசித்து பேசுவதற்கு கட்டுபாடு விதிக்க வேண்டும் என்பதைதான் நான் கூறுகிறேன்.

நாட்டில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் பேச வேண்டும். கதிராமங்கலம் கிராமத்தில் மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நெடுவாசல் மக்களின் குறைகள் என்ன...?

இதுபற்றி எந்த அமைச்சரும் பேசவில்லை. யோசிக்கவில்லை. ஆனால், அமைச்சரவையில் யார் பொறுப்பில் உட்காருவது. ஆட்சியை யார் நடத்துவது என்பதில் மட்டும் குறியாக இருந்து, தங்களது பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.