தூத்துக்குடியில் 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் நடந்த தடியடி, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தூத்துக்குடி விரைந்த ரஜினிகாந்த், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போது சமூக விரோதிகளின் ஊடுருவலால் தான் கலவரம் நடந்ததாகவும் கருத்து தெரிவித்தார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

24வது கட்டமாக தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்த், அரசு மருத்துவமனை டீன், கலவரத்தின் போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தீயணைப்பு துறையினர் உள்பட மொத்தம் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டது. 

அப்போது சூப்பர் ஸ்டார்சார்பில் அவருடைய வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி,  ரஜினிகாந்த் காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார். வீடியோ கான்பரன்ஸ் வசதி தூத்துக்குடியில் இல்லை என்பதால், சென்னையில் உள்ள அலுவலகத்தில் ரஜினியுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என விசாரணை அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், ரஜினி பேசியது குறித்து அவரிடம் 15 கேள்விகள் கேட்டு சம்மன் அனுப்பியது.


 
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் குறித்து, ஆதாரங்கள் அடிப்படையில் எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார். அன்றைய தினம் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு தற்செயலாக நடந்த ஒன்று எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து, ரஜினியின் பதில்களில் சந்தேகம் உள்ளதால், மீண்டும் அவரிடம் விளக்கம் கேட்போம் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.