Thoothukudi shooting 130 bullets used by the police
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட் காவல் நிலையங்களில் பதியப்பட்ட 5 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.
இதையடுத்து ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு டிஎஸ்பி என 5 டிஎஸ்பிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி எஸ்பி பிரவீன்குமார் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள் குறித்து அவர்ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

விசாரணையின்போது துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குறித்த முழு விவரப் பட்டியல், காயமடைந்தவர் பட்டியல், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களின் பட்டியல், தீ வைத்து எரிக்கப்பட்ட மற்றும் கல்வீசி சேதத்திற்குள்ளான வாகனங்கள் எத்தனை,அவற்றின் உரிமையாளர் யார் என்பது தொடர்பான விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த .துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு செய்து சில தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும்தோட்டாக்களை இன்னும் சிபிசிஐடியினரிடம் மாவட்ட காவல்துறையினர் ஒப்படைக்கவில்லை. அவற்றை பெறுவதற்கான முயற்சியில் சிபிசிஐடி ஈடுபட்டுள்ளது.
