காவிரி மேற்பார்வை ஆணையத்தை தமிழக அரசு ஏற்க கூடாது என மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஈரோடு திமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது வரை அதற்கான முயற்சிகளையோ அல்லது அறிவிப்பையோ மத்திய அரசு வெளியிடவில்லை.

இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும்  நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 30 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மெத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதனிடையே ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி காவிரி மேற்பார்வை ஆணையம் தேவையில்லை எனவும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திமுக சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. அதன்படி இரண்டாவது நாளான இன்று திமுக மாநாட்டில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. 

அதாவது, காவிரி மேற்பார்வை ஆணையத்தை தமிழக அரசு ஏற்க கூடாது என மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். 

காவிரி மேற்பார்வை ஆணையத்திற்கு தொடர்ந்து எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.