This regime is not concerned about dengue fever

முறைகேடு புகார்களில் இருந்து தப்பிப்பது பற்றியே அரசுக்கு கவலை என்றும், டெங்கு காய்ச்சல் பற்றி இந்த ஆட்சி கவலைப்படவில்லை என்றும் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெங்குவைப் பற்றி இந்த ஆட்சி கவலைப்படவில்லை என்று கூறினார்.

இந்த ஆட்சியே டெங்குதான் என்று கூறிய ஸ்டாலின், குட்கா ஊழலில் இருந்து எப்படி தப்பிப்பது, மைனாரிட்டியாக உள்ள இந்த ஆட்சியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதிலேயே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சோதனைகள் நடத்தப்படுமா? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நடிகர் திலகத் சிவாஜி கணேசனின் சிலையில் இருந்து கருணாநிதி பெயர் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அதிமுகவை பொறுத்தவரை எந்த காலத்திலும் அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது என்றார். முறைகேடு புகார்களில் இருந்து தப்பிப்பது பற்றியே அரசுக்கு கவலை. தரமற்ற கொசு மருந்து வாங்கி, அரசு ஊழல் செய்துள்ளது என்றார்.

டெங்கு காய்ச்சலால் தினமும் 10 பேர் உயிரிழக்கின்றனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர். விழாவில் செலுத்தும் அக்கறையை டெங்கு ஒழிப்பில் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.