அங்கே கைவெச்சு, இங்கே கைவெச்சு கட்டக் கடைசியில திருவள்ளுவர் மேலேயே கை வெச்சுட்டாங்க. சாப்பிடுற சோத்துல இருந்து சுடுகாட்டுல பொணத்த மூடுற வறட்டி வரைக்கும் தமிழ்நாட்டுல அரசியல்ல சிக்கி அல்லோகல்லப்படுறது  மிகப்பெரிய அவலம். தமிழ்நாட்டில் ஆயிரம் கட்சிகள் இருந்தாலும் ரொம்ப ஆக்டீவாக இருக்குறது ரெண்டே கட்சிகள்தான். ஒன்று இந்துத்வ ஆதரவு கட்சி! மற்றொன்று இந்துக்களுக்கு எதிரான கட்சி. அ.தி.மு.க! தி.மு.க! பா.ஜ.க! காங்கிரஸ்! தே.மு.தி.க! வி.சி.க! பா.ம.க! கம்யூனிஸ்ட்கள்! நாம்தமிழர்! ம.நீ.ம. உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் இந்த அணியில் பாதி, அந்த அணியில் மீதின்னு பிரிஞ்சு நின்னு தாறுமாறாக சண்டை போட்டுக்கிறாங்க. 


இந்த இரு தரப்புகளில், இந்துத்வத்தை ஆதரிப்போரை ‘சங்கிகள்’ அப்படின்னும், இந்துக்களை எதிர்ப்பவர்களை ‘பிளாக் டோழர்கள்’ அப்படின்னும் நெட்டிசன்கள் இரண்டாக வகைப்படுத்தி, விமர்சித்துக் கொட்டுறாங்க. தமிழகத்தில் நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் நடக்கும் மிகப்பெரிய முட்டல், மோதல், உரசல், ஊடல்களே காரணம். அதன் நீட்சியாகத்தான் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவரின் சிலை மீதே சாணியடித்து, கறுப்பு  தாளினால் அவரது கண்களை மறைக்குமளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. உலக  பொதுமறையான திருக்குறளை எழுதிய பெரிய அய்யன் திருவள்ளுவரை இப்படி அவமானப்படுத்திய நிகழ்வுக்கு எதிராக கொதித்து எழுந்திருக்கின்றனர் தமிழக அரசியல் தலைவர்கள். அவர்களின் உள்ளக் குமுறல்கள் இதோ....

திருவள்ளுவர் சிலையை அசிங்கப்படுத்தக்கூடிய ஒரு கேவலமான செயலை நடத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து உடனே விசாரணை நடத்தி, இந்தக் கொடுமையை, அக்கிரமத்தை, கேவலத்தை செய்திருக்க கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - மு.க. ஸ்டாலின். 

திருவள்ளுவர் சிலையை அவமதித்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்தச் செயலை செய்தவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள். இதற்கு காரணமானோர் மீதும், இதை தூண்டியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமதாஸ்.

மூடர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பது சிலை மட்டுமில்லை. வள்ளுவர் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து, மண்ணோடு போன பின்பும் வள்ளுவம் வாழும். 
-கனிமொழி

உலகின் பல நாடுகளில் பல மொழி பேசுவோர், திருவள்ளுவர் சிலை எழுப்பி, தங்களை வாழ வழிகாட்டும் அறநெறி மாண்பாளராகப் போற்றுகின்றனர் வள்ளுவரை. இக்கொடியோர் செயலால் தமிழகம் வெட்கித் தலைகுனிகிறது. 
-வைகோ

திருவள்ளுவரும் திருக்குறளும்! ஜாதி, மதம், கடவுள், அரசியல் கடந்த பொதுமறையாக திகழ்கிறார்கள். வள்ளுவரை எந்த ஒரு தனி மனிதனும் அல்லது அமைப்பு சொந்தம் கொண்டாட முடியாது. இந்த செயல், வேண்டுமென்றே திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. 
-இரா.முத்தரசன்

திருவள்ளுவர் ஒரு அறிவுக் கடல். அவரை எந்த ஒரு சிமிழுக்குள்ளும் அடைக்க பார்க்காதீர்கள். 
-வைரமுத்து

*சுய உணர்வு உள்ளவர்கள், மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இதை செய்திருக்க மாட்டார்கள். எல்லா நிலைகளையும் கடந்த, எதையும் சாராத உலகத்துக்கே பொதுவான நூல் வள்ளுவம். அவரை தனியாக யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. 
-கே.எஸ்.அழகிரி

 இப்படியாக நீள்கிறது வருத்தம், கோபம், கொந்தளிப்பு மற்றும் ஆதங்கம். 
கடைசியில வள்ளுவரையும் உங்க அட்டு அரசியலால் பாதிக்கப்படும் நபராக்கிட்டீங்களே!
-