ஜெயலலிதாவுக்கு எதிரில் நாக்கை துருத்தி பேசியதால்தான் விஜயகாந்துக்கு வீழ்ச்சி ஆரம்பமானது என சூளூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா ’ஸ்டாலினையும், துரைமுருகனையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார். அத்தோடு அதிமுகவையும் விமர்சித்தார். 37 எம்பிக்கள் இருந்து என்ன பயன்? சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை எதிர்த்த ஒரே தலைவர் விஜயகாந்த்தான். ஜெயலலிதாவை எதிர்த்து தைரியமாக பேசியவர் கேப்டன் மட்டும் தான். 2011 சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணி அமைத்த தேமுதிகவின் தயவால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது நடக்கும் ஆட்சியும் எங்களால்தான் வந்தது என்று பேசினார்.

பிரேமலதாவின் இந்தபேச்சு அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஆத்திரப்பட வைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சூளூர் எம்.எல்.ஏ கனகராஜ், ’தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் நாகரீகம் இன்றி விஜயகாந்த் எதிர்த்துப்பேசி நாக்கை துருத்தியதால்தான் அவரது அரசியல் வீழ்ச்சியை சந்தித்தார்.

ஜெயலலிதா இல்லாவிட்டால் தேமுதிக 29 இடங்களை பிடித்திருக்காது, விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவராகவே வந்திருக்கமுடியாது. தேமுதிக தொகுதிக்கு 1000 ஓட்டுகள், 500 ஓட்டுகள் வைத்துள்ள கட்சி. 500 ஓட்டுகளை வைத்திருக்கும் மதிமுகவை திமுக கூட்டணியில் சேர்க்கும்போது, ஆயிரம் ஓட்டுகளை வைத்திருக்கும் தேமுதிகவை, அதிமுக கூட்டணியில் சேர்ப்பதில் தவறில்லை’’ என அவர் தெரிவித்தார்.