தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

பொது முடக்கம் மே 3ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கி வருகின்றார். அதில், மக்கள் அதிகம் இருப்பதாலேயே சென்னையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சவாலாக உள்ளது. 

காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை; ரேசன் கடைகள், காய்கறிக் கடைகளில் தனி மனித இடைவெளியை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். நெருக்கடியான நிலையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது. தமிழகத்தில் அந்த நிலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.