தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அதிமுக-வினர், சென்னை, மெரினா கடற்கரையில் இருக்கும் அவரது நினைவிடத்திற்கு அமைதிப் பேரணி மேற்கொண்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது, ‘’அதிமுகவோடு இணைந்து பணி செய்வதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவில் இணைப்பதற்குத் தயார் என்று வெளிப்படையாக சொல்லியும், அந்தப் பக்கத்தில் இருந்து எங்களுக்கு சரிவர பதில் வரவில்லை. அது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் முன்னர் செய்தியாளர்களை சந்தித்து, தீபா பேரவையை அதிமுகவோடு இணைப்பேன் என்று சொன்னபோது, எனக்கு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு தேவைப்பட்டது. 

அதிமுகவில் சேர்வதற்கு இ.பிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். எங்களை அழைத்து செயல்படாமல் விட்டுவிட்டு, தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு எங்களுக்கு உரிய மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை. கட்சியில் எனக்கு கொள்கை பரப்பு செயலாளராக பதவி வழங்கப்படும் என எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும். தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர். பொதுத்தேர்தல் வந்தாலே வெற்றிடமும் இருக்கிறதா இல்லையா, யார் தலைவர் என்று தெரிந்துவிடும். மத்திய அரசை கையில் வைத்துக்கொண்டு அதிமுக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையாக இருக்கிறது. 

எனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து இனி தெரியப்படுத்துவேன். தற்போது செயல்பட்டு வரும் அதிமுக அரசு, மிகவும் மந்தமாக உள்ளது. சரியான அரசு நிர்வாகம் இல்லை’’என்று குற்றம் சாட்டினார்.