கடவுள் பக்தி உண்மை என்றால் வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் பாஜகவினர் செல்ல வேண்டும். அப்படி சென்றால் நாங்களும் வருவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

மத்திய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நேற்று மாலை கோவை, கருமத்தம்பட்டியில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த மாநாட்டில், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்புரையாற்றினார்.

பின்னர், கே.எஸ்.அழகிரி உரையாற்றுகையில்;- நேருவுக்கு கடவுள், மதம் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், இந்த இரண்டின் மீதும் நம்பிக்கை கொண்ட காந்தியின் சீடராகவே நேரு இருந்தார். அதுதான் ஜனநாயகம். பாஜகவினரின் கடவுள் பக்தி உண்மை என்றால் வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் அவர்கள் செல்ல வேண்டும். அப்படி சென்றால் நாங்களும் வருவோம். காங்கிரஸிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், சுயமரியாதையுள்ள கட்சி. காங்கிரஸ் தற்போது புதிய பாதையில் பயணிக்கிறது. மோடியை வீழ்த்த மாபெரும் வீரனான ராகுல் காந்தியால் மட்டும்தான் முடியும் என்று தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீட்டில் பேரம் நடத்த மாட்டோம் என ஏற்கனவே தினேஷ் குண்டு ராவ் தெரிவித்த நிலையில் அதைப் பற்றி கே.எஸ்.அழகிரி, நாங்கள் அதிகமாகவும் கேட்க மாட்டோம். குறைவாகவும் பெறமாட்டோம். தேவையானதைப் பெறுவோம். அதுதான் தமிழ்நாடு காங்கிரஸின் கொள்கை என கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து விளக்கினார்.