ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி,மாறி  சினிமா வசனங்களைப்போல பேசுவது மட்டுமே போதுமென்று முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா? என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும் அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் தமிழக அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்திருக்கிறது.

கொரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்ததாக சொன்னால், அதற்கான இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றிக் கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கொரோனா தடுப்புப்பணியில் போராடி வரும் மருத்துவத்துறையினருக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் நிலைமை கவலைக்கிடமாகிக்கொண்டே செல்கிறது. ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி,மாறி  சினிமா வசனங்களைப்போல பேசுவது மட்டுமே போதுமென்று முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா?’’என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.