முகக்கவசத்தை அணிந்தபடியே பேசுங்கள். அப்போது தான் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். கொரோனா இல்லாத தமிழகம் படைக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’சென்னையில் இப்போது நடைமுறையில் உள்ள 5 ஆவது ஊரடங்கு தான் கடைசி ஊரடங்காக இருக்க வேண்டும். இதை மக்கள் தான் தங்களின் செயல்பாடுகள் மூலம் தீர்மானிக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோயையும் தடுக்கலாம்; ஊரடங்கிலிருந்தும் விடுபடலாம்.

சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ள முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுவது மனநிறைவு அளிக்கிறது. இதே போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுக்கு இணையான ஊரடங்கை சென்னையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத் தான் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இப்போது அது நிறைவேறியுள்ளது.
 
முகக்கவசம் அணிவதன் நோக்கமே மூக்கு, வாய் வழியாக கொரோனா வைரஸ் நுழைவதையும், வெளியாவதையும் தடுப்பதற்காகத் தான். அதை உணராமல் பேசும் போது முகக்கவசத்தை இறக்கி விடுவது தவறு. முகக்கவசம் அணிவதன் நோக்கத்தையே இது சிதைத்து விடும்.

மற்றவர்களிடம் பேசும் போதும், பிற தருணங்களிலும் முகக்கவசத்தை அகற்றுவது, இறக்கி விடுவதை தவிருங்கள். முகக்கவசத்தை அணிந்தபடியே பேசுங்கள். அப்போது தான் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். கொரோனா இல்லாத தமிழகம் படைக்க முடியும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.