திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புயல், மழை காரணமாக அந்த தொகுதியில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூர் தொகுதியில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கான நேர்காணல் ஜனவரி 4-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றார். நேரகாணலுக்கு பின்னர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படுமென அவர் கூறினார்.

இதனிடையே, அ.தி.மு.க. சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் விருப்பமனு வரும் 2 ஆம் தேதி முதல் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4 ஆம் தேதி விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.