ஜெயலலிதாவால் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட  முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட  செயலாளர் பொறுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வழங்கியுள்ளார். 

நெல்லையில் வேளாண்மைத்துறையில், 4 ஓட்டுநர்கள் நியமனத்திற்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி நெருக்கடியே காரணம் என்று புகார் எழுந்தது. 

இதனையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யப்பட்டு வெளியே வந்தார். பின்னர், அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி இருந்து வந்தார். சமீபத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமணம் முதல்வர் முன்னிலையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனால், மக்களவை தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவை பலப்படுத்தும் முயற்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆகையால், புதிய மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டும், மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதில், ஜெயலலிதாவால் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் எடப்பாடி தயவால் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட  செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.