திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மு.க. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திருவள்ளுவர் படத்தில், காவி வண்ணத்தை மாற்றி, திருநீரு பூசி மற்றி வெளியிட்டிருந்தது. இந்தப் படம் சர்ச்சையாக மாறியது. பாஜகவின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தச் சர்ச்சை ஓயாத நிலையில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு நடந்தது.
ஏற்கனவே திருவள்ளுவர் படத்தைக் காவியில் வெளியிட்டதற்காக பாஜகவை கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கும் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் மூலம் கண்டித்திருந்தார். அதில், “தமிழுக்காக பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்” என மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.


மு.க. ஸ்டாலினுக்கு பதிலடி தரும் வகையில், பாஜகவின் மேலிட தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “உலகளாவிய மனித குலத்துக்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைப்பதை, மு.க. ஸ்டாலின் கைவிட வேண்டும். திருவள்ளுவர் ஒரு துறவி; அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்ல.” என்று அதில் தெரிவித்துள்ளார்.