திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ரத்து செய்துவிட்டார்.

பிரதமர் மோடிக்காக வாரணாசி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் நேராக அங்கிருந்து திரும்பி திருப்பரங்குன்றம் தான் சென்றார். திருப்பரங்குன்றத்தில் அதிமுக தேர்தல் பணிமனை திறந்து வைத்துவிட்டு சுமார் நான்கு நாட்கள் வரை அங்கு தேர்தல் பணியில் ஈடுபட ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றத்தில் காலை மாலை என இரண்டு சமயங்களில் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

 

அதன்படி நேற்று காலை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வேனில் இருந்தபடி ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து வந்தார். மூன்று இடங்களில் அவர் பிரசாரம் செய்த நிலையில் மூன்றாவது இடத்தில் அவர் பிரச்சாரத்தை கேட்பதற்கு கிட்டத்தட்ட ஆட்களே இல்லை என்று கூறிவிடலாம். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்களும் சரி அமைச்சர்களும் சரி ஓ.பன்னீர்செல்வத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

இதனால் அவரது பிரச்சாரத்திற்கு என்று சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் பிரச்சாரத்திற்கு என்று ஆட்களை அழைத்து வர செலவிடப்படும் பணமும் செலவிடப்படவில்லை. ஓபிஎஸ் உன்கூட தனது பிரச்சாரத்திற்கு ஆட்களை அழைத்து வந்து மாஸ் காட்ட வேண்டும் என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் மாலையில் நடைபெறும் பிரச்சாரத்தில் பெரிய அளவில் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது என்பதால் திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தையே நேற்று காலை ரத்து செய்துவிட்டு கோவை சூலூர் புறப்பட்டுவிட்டார் ஓபிஎஸ். 

இதுகுறித்து விசாரித்தபோது திருப்பரங்குன்றத்தில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து பெரிய அளவில் அதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்கப் போவதில்லை. எனவே அவரது பிரச்சாரப் பணிகளில் தேர்தல் பணிக்குழு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று அதிமுகவினரே கூறுகின்றனர். அதேசமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் வரும்போது தடல்புடல் ஏற்பாடு செய்து கூட்டத்தை கொண்ட அதிமுக தேர்தல் பணிக்குழு ஆயத்தமாகி வருகிறது.