அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தன் போது பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்தி இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுக்கு  நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஒரு இந்து எப்போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று  கமல் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஷத்தைக் கக்கும் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக கமல் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோட்சே குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பற்றி விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது கருத்தைக் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்  ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலாக பேசி இருக்கிறார். அதை வரவேற்று பாராட்டுகிறேன். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நடந்த முதல் பயங்கரவாத நடவடிக்கை காந்தி படுகொலையாகும். அதைத்தான் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.


கோட்சே இந்து மதத்தை சார்ந்தவர் தான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய நிலை தற்போது எழுந்துள்ளது. கோட்சே வாழ்க, காந்தி ஒழிக என்று அண்மையில் உத்தரபிரதேசத்தில் இந்து மகாசபையை சேர்ந்த ஒரு பெண்மணி முழக்கமிட்டார். 

காந்தி படத்தை பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் தான் கமல்ஹாசன் போன்றவர்களை பேச வைத்துள்ளது.


நாதுராம் கோட்சே கிறிஸ்தவரோ, முஸ்லீமோ அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. அந்த வரலாற்று உண்மையை அவர் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளே அவரை இந்து என்பதால்தானே தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர் கோட்சேவை இந்து என்று உரிமை கொண்டாடலாம், ஆனால் கமல்ஹாசன் அவரை இந்து என்று சொல்லக்கூடாதா? என திருமா கேள்வி எழுப்பியுள்ளார்