திருச்சியில் தி.மு.க. கூட்டணி சார்பாக வைகோ போட்டியிடுகிறார்! என்று ஒரு தகவல் பெருவாரியாக கிளப்பப்பட்டது. துவக்கத்தில் இதை மறுக்காமல் வைகோவும் ரசித்துச் சிரித்தார். ஆனால் கட்டக் கடைசியில் இதை காங்கிரஸுக்கு ஒதுக்கி, திருநாவுக்கரசர் கையில் கொடுத்துவிட்டனர். 

திருச்சி தி.மு.க.வின் அசையாத தூணாக கே.என்.நேரு இருப்பதால், எப்படியும் நம்மை ஜெயிக்க வைத்துவிடுவார்! எனும் நம்பிக்கையில் அரசரும் பொட்டி படுக்கையோடு திருச்சி வந்திறங்கி வேலையை துவக்கினார். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால்....மூணாவது இடத்துக்கே முக்கி முனங்க வேலை வந்துவிடுமோ? என்று அவர் புலம்பித் தவிப்பதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

ஏன்? என்றபோது அவர்கள் இப்படி விளக்கினார்கள்.... “திருச்சி மாவட்டம் மட்டுமல்ல இந்த மண்டலத்திலேயே தி.மு.க.வில் செல்வாக்கான நபர் நேரு. அந்த வகையில் திருச்சிக்கு பக்கத்தில் இருக்கும் பெரம்பலூர் தொகுதியை தன் குடும்பத்தை சேர்ந்த ஒரு நபருக்கோ அல்லது தான் குறிப்பிடும் நபருக்கோ ஒதுக்கிடும்படி ஸ்டாலினிடம் கேட்டார் ஆனால் நடக்கவில்லை. பாரிவேந்தருக்கு கொடுத்துவிட்டார்கள். அடுத்து திருச்சி தொகுதியையாவது தனது நண்பர் அடைக்கலராஜின் மகனுக்கு கேட்டார். 

ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இதனால் கடும் ஆத்திரத்துக்கு போய்விட்டார் நேரு. ’தலைவர் நிழலா இருந்து ஆதாயமடைஞ்சது மட்டுமில்லாம, இப்போ தளபதியின் நிழலாகவும் இருந்துட்டு இருக்கும் துரைமுருகன் மகனுக்கு சீட் கொடுக்குறாங்க. கட்சிக்கு எந்த புண்ணியத்தையும் கொண்டு வந்து சேர்க்காத பொன்முடிக்காக அவரது பையனுக்கு சீட் கொடுக்கிறாங்க. ஆனால் எந்த ஆதாயமுமில்லாம,  கட்சிக்காக எல்லாவற்றையும் இழக்கும் நான் ஒரு சீட் கேட்டா தரமாட்டேங்கிறாங்க.  பேசாமல் கட்சியை விட்டு விலகிடவா?’ என்று தாம்தூமென குதித்துவிட்டாராம் நேரு.

 

அவரை சமாதானப்படுத்த வெகுநேரம் பிடித்திருக்கிறது தலைமை கழக நிர்வாகிகளுக்கு. ஆனாலும் கோபம் தீரவில்லை அவருக்கு. தன் கோபத்தையெல்லாம் தங்கள் கூட்டணியின் சார்பாக ஒதுக்கப்பட்டிருக்கும் காங்கிரஸின் மீதுதான் காட்டுகிறார் நேரு. திருச்சியைப் பொறுத்தவரையில் நேரு கண் அசைத்தால்தான் தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டுவதில் துவங்கி, ஏதாவது பிரச்னையென்றால் போர்க்குரல் கொடுப்பது வரை வந்து நிற்பார்கள். திருச்சியில் காங்கிரஸ்காரர்களே, கூட்டணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் கூட நாடி நிற்பது நேருவைத்தான். 

இப்படியிருக்க, தன் தலைமை மீது இருக்கும் ஆத்திரத்தால் இவர்  காங்கிரஸுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறாராம். பிரசாரம் முதல் பஞ்சாயத்துகளை தீர்ப்பது வரை எல்லாவற்றிலும் மேம்போக்காம தலைகாட்டிவிட்டு, உணர்வுப்பூர்வமாகவோ அல்லது ஆழ்ந்தோ எதையும் செய்வதில்லை, உதவுவதில்லையாம். இதையெல்லாம் பார்த்துவிட்டு  வேட்பாளர் திருநாவுக்கரசு திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார். ’ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணி தன்னோட தே.மு.தி.க. வேட்பாளருக்காக களமிறங்கி ஆடுது, இன்னொரு பக்கம் அ.ம.மு.க.வின் ஜனரஞ்சக வேட்பாளரான சாருபாலா தொண்டைமான் கலக்கிட்டு இருக்கிறாங்க. 

இந்த நிலையில நேருவும் காலை வாரி விட்டா எங்கே மூணாவது இடத்துல வந்து நிக்குறதுக்கே முனங்கணும்’ என்று வெளிப்படையாக வேதனை கமெண்டுகள் வெடிக்க துவங்கிடுச்சு. ” என்று நிறுத்தினார்கள். ஆல் இன் ஆல் தல நேரு! கொஞ்சம் காங்கிரஸ் பக்கமும் பாரு!