உச்சம் தொட்டுவிட்டது தமிழக காங்கிரஸுக்குள் நடக்கும் யுத்தம். மாநில தலைவராக இருக்கும் திருநாவுக்கரசரை மாற்றியே தீர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவைன், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து மிரட்டலில் இறங்கியுள்ளார். இந்நிலையில், இவரது இந்த திடீர் துள்ளலுக்கு காரணம் ஸ்டாலினா? என்று சந்தேகிக்கிறது காங்கிரஸ் தலைமை. 

என்ன விவகாரம்?... சென்னையில் கடந்த திங்கட்கிழமையன்று சத்தியமூர்த்திபவனில் ‘சக்தி திட்டத்தின் துவக்கவிழா’ நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத், மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் மாஜி தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஒரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இருவர் வந்திருக்கின்றனர். அவர்கள் இளங்கோவனின் ஆதரவாளர்கள். அவர்களை வெளியே போகச்சொல்லி திருநாவுக்கரசர் சவுண்டு விட, உடனே எழுந்த இளங்கோவன் பதிலுக்கு கடும் சப்தமிட்டு ‘நானும் வெளியே போய்விடுவேன்.’ என்று கொதித்திருக்கிறார். 

அதன் பின் அங்கு வந்த முகுல்வாஸ்னிக், இளங்கோவனை சமாதானம் செய்திருக்கிறார். ஆனாலும் அடங்காதவர், ‘காங்கிரஸ் பாரம்பரியம் தெரியாத அரசரை உடனே பதவியிறக்கம் செய்யலேன்னா, நான் ஒரேடியா வெளியே போயிடுவேன். என் பின்னாடி வர்றவங்களை நான் தடுக்க முடியாது.’ என்று எச்சரித்திருக்கிறார். இதில் முகுல், சஞ்சய்தத் போன்றவர்கள் அப்செட். 

இந்த விஷயத்தை அன்றே ராகுலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இதைத்தொட்டு, இளங்கோவனுக்கு ஏது இவ்வளவு தைரியம் திடீரென்று? ஒருவேளை அவரை ஸ்டாலின் இயக்குகிறாரா? என்று கேட்டிருக்கிறது ராகுல் வட்டாராம். சம்பந்தமேயில்லாமல் தி.மு.க. தலைவர் இதில் இழுக்கப்பட காரணம் உள்ளது. திருநாவுக்கரசருக்கும், ஸ்டாலினுக்கும் ஆகவே ஆகாது. 

சம்பிரதாயத்துக்கு பேசிக் கொள்கிறார்களே தவிர மற்றபடி, தனது நண்பர் ரஜினியுடன் அரசியல் கலப்புக்கு திருநாவுக்கரசர் துடிக்கிறார். ஒருவேளை அவர் கட்சி துவங்கவில்லை என்றால் அட்லீஸ்ட் கமலை தங்கள் கூட்டணியில் இணைக்க விரும்புகிறார். ஆனால் இது இரண்டுமே ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. இதில் துவங்கி பல விஷயங்களில் அரசருடன் ஸ்டாலினுக்கு முரண்பாடு. 

ஆக திருநாவுக்கரசரை தலைமை பதவியில் இருந்து நீக்கிவிட்டால், கூட்டணியை நிம்மதியாக வழி நடத்தலாம் என்பது ஸ்டாலினின் எண்ணம். அதனால்தான் இளங்கோவனுக்கு பின்னாடி இருந்து சப்போர்ட் செய்து அரசருக்கு எதிராக கொம்பு சீவி விடுகிறாரோ? என்று டவுட்டடிக்கிறது டெல்லி காங்கிரஸ் வட்டாரம். ஆக மொத்தத்தில் இந்த தேர்தலிலும் கெத்தாக நிற்க முடியாத அளவுக்கு தாறுமாறாக டேமேஜ் ஆகிக் கொண்டிருக்கிறது தமிழக காங்கிரஸ்! என்கிறார்கள்.