கேஸ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில், வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் திருநாவுக்கரகர் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். கேஸ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர், அனைவரும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம், திருநாவுக்கரசர் கூறியதாவது:-

மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவினருக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் கொடுத்தோம். பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் ரத பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், நேற்று குஜராத் சென்ற ராகுல்காந்தியின் பாதுகாப்பு வாகனம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. ராகுல்காந்தி தாக்கப்பட்டத்தை கண்டித்தும், பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த சாலை மறியல் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.