திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் சீட் ஷேரிங் முடிந்து லிஸ்ட் இறுதி செய்யப்படுள்ளது. இந்த கூட்டணியில் மதிமுக தங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. விருதுநகர், ஈரோடு மற்றும் திருச்சி ஆகிய தொகுதிகளை வைகோ கேட்டிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் திருநாவுக்கரசர் போட்டியிட புதுக்கோட்டையின் பெரும்பாலன பகுதிகள் அடங்கிய திருச்சி தொகுதியை தேர்வு செய்திருந்தார். ஆனால் மதிமுக திடீரென திருச்சி தொகுதியைக் கேட்க வைகோ அங்கே நிற்பதாகப் பேசப்பட்டது.

அதே நேரத்தில் திருநாவுக்கரசர் சொந்த ஊர் மற்றும் பலமுறை வென்ற அறந்தாங்கி தொகுதி இருக்கும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என திருநாவுக்கரசர் நினைக்க, இம்முறை வேலூர் வேண்டாம் ராமநாதபுரத்தை எங்களுக்குத் தாருங்கள் என முஸ்லீம் லீக் கேட்டதாலும், அந்தத்தொகுதி முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்க திமுக முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டதாலும் அங்கும் வாய்ப்பு பறிபோனது.

இதனால் திருநாவுக்கரசர் தனிப்பட்ட முறையில் தனக்காக திருச்சி தொகுதியை ஒதுக்கக் கோரி திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்ததாக ஒரு தகவல் காங்கிரஸ் வட்டாரத்தில் வெளியானது. இந்நிலையில் திருநாவுக்கரசருக்கு ஏற்ற தொகுதி கிடைக்காமல் போய்விடும் என்பதால் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்கிற கருத்தும் எழுந்தது.

இந்நிலையில்தான்  திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடும் என்பதால் திருச்சி தொகுதியில் கூட்டணிக் கட்சிகளின் போட்டியில்லை.

இதையடுத்து திருநாவுக்கரசருக்குதற்போது ரூட் கிளீயராகியுள்ளது. ஒரு வழியாக மதிமுகவுக்கு ஒரு சீட் மட்டும் ஒதுக்கியதில் திருநாவுக்கரசர் செம மகிழ்ச்சி அடைந்துள்ளார்.