நாளை வெளியாக உள்ள திரெளபதி படத்தை மறைமுகமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சுட்டிக்காட்டி உள்ளதாக கருத்துகள் பரவி வருகிறது.  

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான கன்னி மாடம் படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. சாதி வெறியர்களுக்கு எதிராக ஆணவக் கொலைகளை சாடியுள்ள இந்த படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த படத்தை பார்த்து தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ’’கன்னி மாடம் என்கிற இந்த திரைப்படம் ஆணவக் கொலைக்கு எதிரானது. ஜாதி வெறிக்கு எதிரானது. மத வெறிக்கு எதிரானது. காதல் புனிதமானது உள்ளிட்ட பல விஷயங்களை ஒரே நேரத்தில் சொல்லியிருக்கிறது.  இளம் தலைமுறைக்கு பாடம் புகட்ட கூடிய திரைப்படமாக இது வெளிவந்துள்ளது.எனவே டைரக்டர் போஸ் வெங்கட் மற்றும் தயாரிப்பாளர் ஹசீர் ஆகியோரை பாராட்டுகிறேன்.

நல்ல பாடல்களை கொடுத்த இசையமைப்பாளருக்கும், ஒவ்வொரு காட்சிகளை திறமையாக படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கும் என் வாழ்த்துக்கள். இதுபோன்ற படங்கள் விருதுகள் பெறுகிறதோ? இல்லையோ? சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அந்த வலிமை கன்னி மாடம் படத்திற்கு உள்ளது. நல்ல வழிகாட்டியாக இந்த படம் அமைந்துள்ளது. வணிக நோக்கில் எத்தனையோ படங்கள் வருகின்றன. அவர்கள் வெற்றியை வசூலில் குவிக்கிறார்கள்.

ஆனால் அவை சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியாரின் கருத்துக்களை சேர்க்கின்ற படமாக கன்னி மாடம் அமைந்துள்ளது. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்’’என அவர் தெரிவித்துள்ளார். நாளை வெளியாக உள்ள நாடகக் காதலை தோலுரிக்கும் படம் எனக் கூறப்படும் திரெளபதி படத்தில் ஜாதிகள் உள்ளதடி பாப்பா என்கிற கேப்சனுடன் வெளியாக உள்ளது. இந்நிலையில் கன்னிமாடம் படம் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்கிற கருத்தை வலிந்து கூறி திரெளபதி படத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக அவரை உற்று நோக்குபவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.