மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு நாளில் திருமா போட்ட ட்வீட்டை திமுகவினரும், ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கூறிய பிறந்த நாள் வாழ்த்தை விசிக தொண்டர்களும் சுத்தமாக ரசிக்கவில்லையாம்.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முதலே திமுக – விசிக கூட்டணி தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலேயே இருந்து வருகிறது. 2014 தேர்தல் சமயத்தில் விசிக 2 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கி கையை விரித்தது திமுக. இது மிகப்பெரிய அவமானம் என்று கூறி திமுகவிற்கு எதிராக விசிக தொண்டர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இதன் பிறகே கலைஞர் தலையிட்டு விசிகவிற்கு திருவள்ளூர் தொகுதியையும் சேர்த்து கொடுத்தார்.

பிறகு 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு சென்ற திருமாவளவன் மீண்டும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக உடன் கூட்டணி அமைத்தார். இந்த முறையும் கடந்த முறையை போல ஒரே ஒரு தொகுதி என்பதில் திமுக உறுதியுடன் இருந்தது. திருமாவளவன் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் சிதம்பரம் தொகுதி மட்டும் தான் என்பதில் ஸ்டாலின் கடுமை காட்டினார். இதனால் கூட்டணியில் இருந்து விசிக விலகக்கூடும் என்று தகவல் வெளியான நிலையில் ஒரே ஒரு படி மட்டும் ஸ்டாலின் இறங்கி வந்தார். விழுப்புரம் தொகுதியை விசிகவிற்கு வழங்குவதாகவும் ஆனால் அந்த தொகுதி வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்தது. வேறு வழியே இல்லாமல் விசிகவும் இதனை ஏற்று விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதித்தார். அந்த வகையில் விசிகவிற்கு இரண்டு எம்பிக்கள் என்று கூறினாலும் திமுக கொறடா உத்தரவு விழுப்புரம் எம்பி ரவிக்குமாரை கட்டுப்படுத்தும்.

எனவே நாடாளுமன்றத்தில் திமுக நிலைப்பாட்டை மீறி விசிக எம்.பி.யால் எதுவும் செய்ய முடியாது. இதன் அடிப்படையில் பார்த்தால் நாடாளுமன்றத்தில் விசிகவிற்கு ஒரே ஒரு எம்பி தான் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இப்படி தேர்தலில் கூட்டணி என்றாலும் திமுக – விசிக உறவு ஒட்டியும் ஒட்டாமல் தான் இருந்து வருகிறது. மேலும் பாமகவிற்கு எதிரான தீவிர நிலைப்பாடு கொண்டது விசிக. ஆனால் பாமக விவகாரத்தில் வந்தால் ஏற்போம் என்கிற மனநிலையில் திமுக இருந்து வருகிறது.

2021 தேர்தலுக்கு புதிய கட்சிகளுடன் கூட்டணி என்று திமுக காய் நகர்த்த ஆரம்பித்தது. பாமகவை குறி வைத்து திமுக செயல்படுவதாக விசிகவிற்கு ஏற்னவே சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் தான் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு நாளில் திருமாவளவன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் கூலி உயர்வு கோரிய போராடிய தொழிலாளர்களை போலீசார் அடித்து விரட்டியதால் 17 தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று திருமா கூறியிருந்தார். மேலும் அந்த செயலை அரச பயங்கரவாதம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார் திருமா.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம் நடைபெற்றது திமுக ஆட்சியில். இதன் மூலம் திமுக ஆட்சியில் நடந்த சம்பவத் அரச பயங்கரவாதம் என்று கூறியிருந்தார் திருமா. இந்த ட்வீட் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை எரிச்சல் அடைய வைத்தது. கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பழைய விஷயங்களை கிளறலாமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அதற்கு மறுநாள் மு.க.ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

அது கூடப் பரவாயில்லை ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்தததை ட்விட்டரில் வேறு தெரிவித்திருந்தார் ஸ்டாலின். அதிலும் ராமதாசை மருத்துவர் அய்யா என்று வேறு குறிப்பிட்டிருந்தார். இது விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இப்படி விசிக தலைவர் திருமாவளவன் போட்ட ட்வீட் திமுக நிர்வாகிகளையும், மு.க.ஸ்டாலின் போட்ட ட்வீட் விசிக நிர்வாகிகளையும் எரிச்சல் அடைய வைத்திருப்பது கூட்டணியில் புகைச்சலுக்கான அறிகுறி என்கிறார்கள். பாமகமேலும் திமுக பக்கம் நெருங்கும் பட்சத்தில் இந்த விஷயம் பூதாகரமாக வெடித்துக் கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை.