இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020, இந்துத்துவ மதவாத ஆட்சியில் நிகழும் அனைத்து சட்டத்திருந்தங்களும் சனாதன பார்ப்பனிய சித்தாந்தத்தையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கிற விதமாகவும், மக்களை அடிமைப்படுத்தும் சர்வாதிகார அரசியல் நிலைப்பாட்டை நிறுவுவதாகவுமே இருக்கின்றன. சிஏஏ போராட்டம் அதோகதியில் நின்று போனது இயற்கை காரணமே என்றாலும் அது மீண்டும் அதே உத்வேகத்தோடு தொடருமா என்று தெரியவில்லை. அதற்கிடையில் சமூகநீதி இட ஒதுக்கீட்டில் ஆக்கிரமிப்பு என்றொரு இடி. தற்போது இன்னும் ஒருபடி மேலே போய் இயற்கை வளங்களுக்கு எதிரான தொழிற்சாலை திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்ற உள்ளது.


தினம் தினம் ஏதாவது ஒன்றிற்காக மக்கள் போராட்டத்தை கையிலெடுக்க வேண்டிய நிர்ப்பந்தங்களை உருவாக்கி வருகிறது அரசின் அறிவுப்புகள் அனைத்தும். அதாவது இந்த EAI எனப்படும் சட்டம் தொழிற்சாலை அமைப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறையை கொண்டதாகும். ஒரு தொழிற்சாலை அமையப்போகிறதென்றால் அதன் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படக்கூடாது, இயற்கை வளம் சுரண்டப்படக்கூடாது போன்ற சட்ட விதிமுறைகளை கொண்டதாகும். அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டால் அரசு அந்த நிறுவனத்திற்கு உரிமை வழங்கினாலும் பொதுமக்களும் அதற்கு எதிர்ப்பின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த நிறுவனம் தொடங்க முடியாது.
தற்போதைய EAI சட்டத்திருத்தம் பொதுமக்களுக்கிடமிருந்து அந்த வாய்ப்பை அபகரித்துவிட்டது. அந்த நிறுவனத்தை பற்றிய விமர்சனமோ, அதன் பாதிப்புகளை சுட்டிக்காட்டவோ அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறவர்களால் மட்டும்தான் முடியும் என்கிறது அரசு. பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு நியாயமும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கிறது. இது மக்களாட்சிக்கு எதிரான சர்வாதிகார செயல்பாடு. கார்ப்பரேட்களின் எதேச்சதிகாரத்தை மேலும் ஊக்கப்படுத்துகிற சட்டத்தை கொண்டுவருகிறது அரசு. சுற்றுச் சூழல் பாதிப்பு, மண்ணின் தரம் சீர்கெட்டுப் போதல், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர், தொற்றுநோய் பாதிப்புகள் என்று எதையும் கண்டுகொள்ளாமல் கர்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படப்போகிறது.


கொரோனா ஓய்ந்து இனியான பிழைப்பின் வழிகள் அனைத்தும் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இயங்கும் அடிமை மனோபாவத்தைத்தான் வளர்க்கப் போகிறது. வேலை இல்லையென்றால் என்ன செய்வதென்ற பயம் இனி நமக்குள் அடிமை மனோபவத்தை எல்லையின்றி வளர்க்கும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் அமைப்புகளும் பொதுமக்களை இணைத்து வலுவான போராட்டத்தை முன்னெடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.” என அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.