சிதம்பரம் தொகுதியில் தான் வெற்றி பெற்றதில் துளிகூட மகிழ்ச்சி அடையவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், கடுமையாக இழுபறிக்கு இடையே சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றிருந்தாலும், மத்தியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் கிடைத்த வெற்றியைப் பெரிய அளவில் கொண்டாடாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.


இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி வேதனை தெரிவித்துள்ளார். “சிதம்பரம் தொகுதியில் தான் வெற்றி பெற்றதால், துளி அளவுகூட மகிழ்ச்சி அடையவில்லை. எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, அது மீண்டும் நடந்துவிட்டது. மத்தியில் மோடி ஆட்சி மீண்டும் வந்துவிட்டது. ஜனநாயக விரோத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
  “தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டு, பாஜக கூட்டணிக்கு எதிராக வெற்றி பெற்றதைபோல, தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம்” என்று திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.