திமுக தலைவர் கருணாநிதி மிகவும் நலமுடன் இருக்கிறார் என்றும் தன்னை அவர் அடையாளம் கண்டுகொண்டார் என்றும் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  வழக்கம் போல கருணாநிதியின்  வாழ்த்து கிடைத்ததாக எண்ணிப் பெருமகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை திருமாவளவன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், தனது பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம் என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 17-ம் தேதி அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். ஆனால் அன்று அவர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்  எனவே சனிக்கிழமை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு  சால்வை அணிவித்துவிட்டு தான் கொண்டு சென்ற புத்தகம் ஒன்றை அவருக்கு அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

'நான் திருமாவளவன்' என்று என் பெயரைச் சொன்னதும் நிமிர்ந்து பார்த்தார். நன்றாக என்னை உற்று கவனித்தார். ஏதோ பேசுவதற்கு முயற்சித்து வாயசைத்தார். மேலும், அவரது வலது கையை உயர்த்தினார். நான் அவரது கையைப் பற்றிக்கொண்டேன். அவரும் எனது கையை லேசாக அழுத்திப் பிடித்ததை என்னால் உணர முடிந்தது என திருமா தெரிவித்துள்ளார்.

சில நொடிகள் நான் அவரது முகபாவனைகளைக் கவனித்தேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டதாக என்னால் உணர முடிந்தது.

நானும் பூரிப்படைந்தேன். பின்னர் தலைவர் கருணாநிதியிடம் 'நான் போய் வருகிறேன்' என்று சற்று உரத்துக் கூறினேன். அதனைப் புரிந்துகொண்டு என்னை பார்த்தவாறே 'போய் வாருங்கள்' என தலையசைத்தார் என திருமா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மகத்தான ஆளுமையின்  உடல்நிலை குறித்து தனக்குள் நீங்காத ஒரு வலி இருக்கவே செய்கிறது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.