சென்னையில் ஓடும் கூவம் நதியைச் சுத்தம் செய்வதற்காகக் கூவம் கரையோரங்களில் வசித்து வரும் குடும்பங்களை சென்னை மாநகராட்சி அகற்றிவருகிறது. சென்னை அண்ணா சாலைக்கு அருகே உள்ள அன்னை சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் தினக்கூலித் தொழிலாளர்கள், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 2,092 குடும்பங்கள் வசித்து வந்தன. 

அங்கு நேற்று முன்தினம் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், நாளை உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம். அதற்குள் வீட்டை காலி செய்துகொள்ளுங்கள் என்று நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக உடமைகளை எடுத்துவைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அப்பகுதிக்கு நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் நுழைந்த அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் வீடுகளை இடிக்கத் தொடங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், “அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் ஐந்து மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது என்றும், தற்போது காலி செய்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். ஆகவே, முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் பணிகள் நிறுத்தப்படவில்லை.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். இதையடுத்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஐ தொலைபேசியல் தொடர்பு கொண்ட விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் மக்களின் துயரத்தையும் கோரிக்கைகளையும்  தெரிவித்தார். மேலும் தேர்வு தேர்வு முடியும் வரை குடியிருப்புகள் அகற்றப்படுவதை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து முழு ஆண்டுத் தேர்வு வரையில் தற்காலிகமாகக் குடியிருப்புகள் அகற்றம் நிறுத்தப்படும் என்று  ஓபிஎஸ் அறிவித்தார். இதற்காக திருமா , துணை முதலமைச்சர் ஓபிஎஸ்க்கும்,  தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.