thirumavalavan criticize governor speech
போலி வாக்குறுதிகளும் பொய்யான தகவல்களும் கொண்டதாகவே புதிய ஆளுநரின் உரை அமைந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும், பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கும் உரை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய உரை மிகப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் வணிகர்கள் மட்டுமின்றி, வருவாய் குறைந்து மாநில அரசும் விழிபிதுங்கி நிற்கும் வேளையில் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக ஆளுநர் பாராட்டியிருப்பது வெந்த புண்ணில் விரல்விட்டு ஆட்டுவதைப்போல இருக்கிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைத் தமிழக அரசு முடிவுக்குக் கொண்டுவராமல் இழுத்தடிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். பல மாதங்களாக நீடித்துவரும் அவர்களது பிரச்சனை குறித்து ஆளுநர் மவுனம் சாதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு முதலானவை குறித்து வழக்கம்போல சடங்குத்தனமான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. படிப்படியாக டாஸ்மாக கடைகள் மூடப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சரே அறிவித்துவிட்ட நிலையில் இன்னும் தேடும் பணி நடப்பதாக ஆளுநர் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுபோலவே தமிழக மீனவர்கள்மீதான் இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறைந்துவிட்டதாகம் கூறப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறான இத்தகைய தகவல்களை அவையில் ஆளுநர் தெரிவிப்பது அவை மரபை மீறிய செயலாகாதா என்பதை பேரவைத் தலைவர் விளக்கவேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிப்பதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை. மாறாக அங்கே பிரதமர் வந்து பார்வையிட்டதைப் பாராட்டியிருக்கிறார்.
மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு நன்றி சொல்லவும், பிரதமரைப் பாராட்டவுமே இந்த உரையை ஆளுநர் பயன்படுத்திக்கொண்டுள்ளார். அத்துடன் ஜெயலலிதா அறிவித்த மதுவிலக்கு திட்டத்தைப் புறக்கணித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற கேள்வியே எழுகிறது.
ஒட்டுமொத்தத்தில் போலி வாக்குறுதிகளும் பொய்த் தகவல்களும் கொண்ட பயனற்ற உரையாகவே ஆளுநர் உரை அமைந்துள்ளது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
