1915 மற்றும் 1920ல் மறைந்த தலைவர்கள் 1950ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முன்பு போராட்டம் நடத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள தலைவர்களில் மிகுந்த தெளிவான நபர் என்றும், எதனையும் ஆழமாக அறிந்து பேசக்கூடியவர் என்றும், வரலாற்றை அறிந்த தலைவர் என்றும் திருமாவளவனுக்கு ஒரு பெயர் உண்டு. ஆனால் நியுஸ் 7 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலம் இந்த பெருமையை எல்லாம் இழந்துவிட்டு நிற்கிறார் திருமாவளவன். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று பெண்களே போராட்டம் நடத்துவது பற்றி திருமாளவனிடம் நெறியாளர் கேள்வி எழுப்பினார். 

கல்வி அறிவியல் முன்னேறிய மாநிலமான கேரளாவில் பெண்களே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி வீதியில் இறங்கி போராடி வருவதை நெறியாளர் சுட்டிக்காட்டினார். விவரம் தெரிந்த பெண்களே இப்படி போராடும் போது ஆகமவிதிகளை நாம் ஏன் மதிக்க கூடாது என்று நெறியாளர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், பெண்கள் சில சமயங்களில் என்ன விஷயம் என்று தெரியாமலேயே போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தங்களுக்கு எது தேவை, சுயமரியாதை போன்ற விஷயங்கள் பல்வேறு பெண்களுக்கு தாமதமாகவே தெரியவரும். 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று பெண்களே போராடுவதால் அவர்கள் நிலைப்பாடு சரி என்று ஆகிவிடாது என்று திருமாவளவன் பதில் அளித்தார். மேலும் 1950ம் ஆண்டு மத்திய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் இந்து பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வகை செய்யும் சட்ட மசோதா ஒன்றை உருவாக்கியதாகவும், அந்த மசோதா மூலமாக பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வழங்க அம்பேத்கர் வழிவழை செய்திருந்ததாகவும் திருமாவளவன் கூறினார். ஆனால் அந்த சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி பெண்களையே அந்த சட்டத்திற்கு எதிராக சிலர் போராட வைத்ததாகவும்திருமாவளவன் கூறினார். 

மேலும் முதுபெரும் தலைவர்களாக கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர திலகர் போன்ற இந்துத்துவ வாதிகள் சட்டத்திற்கு எதிராக ஏராளமான பெண்களை அழைத்து வந்த நாடாளுமன்றத்திற்கு முன்பு 1950ம் போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் தெரிவித்தார். இதில் வேடிக்கை என்ன என்றால் 1950ல் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தியதாக கூறிய கோகலே 1915ம் ஆண்டே மறைந்துவிட்டார். 

இதே போல பால கங்காதர திலகரும் 1920ல் காலமாகிவிட்டார். ஆனால் இந்த திலகர் தான் 1950ல் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் கூறியுள்ளார். அதாவது 1915ல் இறந்த கோகலேவும், 1920ல் மறைந்த திலகரும் பெண்களை அழைத்து வந்த நாடாளுமன்றம் முன்பாக பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்திற்கு எதிராக போராடியதாக திருமா கூறியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றை திரித்து திருமா இப்போது தான் பேசியுள்ளாரா? இல்லை இதற்கு முன்பும் இதுபோல் பேசியுள்ளாரா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.