திமுக கூட்டணி கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் நேற்று முன் தினம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த பாமக நிறுவனர் ராமதாஸ், “திருமாவளவனை நல்வழிப்படுத்த முயற்சி செய்தேன். அவருடைய தொண்டர்களுக்கு அரசியல் பயிலரங்கம் நடத்தச் சொன்னேன். அவரை அழைத்து தோட்டத்தில் விருந்து வைத்து அம்பேத்கர் படத்தைத் திறக்க செய்தேன். ஆனால், திருமாவளவன் அவருடைய தொண்டர்களை வேறு மாதிரி தயார்ப்படுத்தியிருந்தார். அவர் மாறவேவில்லை” என்று விமர்சித்திருந்தார்.


இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, “என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வாழை இலையில் சாப்பாடு பரிமாறிய ராமதாஸ், ‘திமுக ஒரு துரோக கட்சி. அது அழிந்து போகக் கூடியது. ஆகவே, திமுகவிலிருந்து வெளியே வர வேண்டும்’ என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் உதாசீனப்படுத்தினேன். அன்றிலிருந்தே ராமதாஸ் என் மீது வீண் பழி சுமத்தி சேற்றை வாரி தூற்றிவருகிறார். நான் எந்த  ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாக இருக்கிறேன்.


திமுகவில் சீட்டு மட்டுமே கிடைக்கும்; நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி பேரம் பேசி பாமக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாமக அமைந்துள்ள கூட்டணி வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணி கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று  உருவான கொள்கை கூட்டணி.  அதிலும் விசிக நிபந்தனையற்ற கூட்டணி என்று அறிவித்தது. 
நம் கூட்டணியில் ஒரே குரல்தான் ஒலிக்க வேண்டும். மோடியை விரட்டியடித்து ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட்டால்  40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்” என்று திருமாவளவன் பேசினார்.