ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் நாடுமுழுதும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களாக பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில் மேலும் 50 நாட்கள் ஆகும் நிலைமை சீரடைய என்று பிரதமர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் படும் துன்பத்தை கண்டித்து நாடுமுழுதும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. நாடுமுழுதும் கடையடைப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மத்திய அரசை கண்டித்து இன்று மதுரை கோபுதூர் பேருந்து நிலையம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகளும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறியதாவது.
மோடி அவர்கள் தனது நிலைப்பாட்டை திரும்ப பெற வேண்டும், சாதாரணமாக புழக்கத்தில் இருந்த 500 , 100 , 50 , 20,10 ரூபாய் நோட்டுகள் இன்று அரசின் அறிவிப்பால் சாதாரண மக்களுக்கு கிடைக்காமல் போனதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். வெளியே கருப்பு பணமுதலைகளை பாது காத்துகொண்டு , அயல்நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் கருப்பு பணத்தை கைப்பற்றி வெளியே கொண்டுவராமல் , சாதாரண மக்களின் அடிவயிற்றில் கைவைக்கும் நிலையை த்தான் பிரதமர் மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற இரு அவைகளும் வாரக்கணக்கில் முடங்கி வருகின்றன. ஆனால் பதிலளிக்க வேண்டிய பிரதமர் அவைக்கு வராமல் வெளியிலிருந்து எதிர்கட்சிகளை விமர்சித்து பேசி வருகிறார். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
