இந்திய வீரர்கள் மீது ஆணி பொருத்திய இரும்பு ராடுகள் கொண்டு தாக்குதல் நடத்திய சீனர்களின் கோழைத் தனத்தை வன்மையாகக் கண்டிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
இந்தியாவின் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோங், தவுலத் பெக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக இந்திய-சீனா ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. எல்லையில் இரு நாட்டு படைகளும் படைகளை குவித்ததால்,  எல்லையில் பதற்றம் நீடித்துவந்தது.  இதனையடுத்து, ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.


இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கிய போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை பயன்படுத்தியே வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகக் கூறப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்திய படையும் கற்களை கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சீனா ராணுவம்  இரும்பு கம்பிகள் மற்றும் கற்களால் தாக்கியது உறுதியானது. சீனா ராணுவம் இந்திய வீரர்களை தாக்கியபோது பயன்படுத்திய இரும்பு ராட்டின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது, ராணுவத்தினருக்கான எவ்வித ஒழுங்கும் இன்றி சீன வீரர்கள் இரும்பு ராடை பயன்படுத்தியிருப்பது  நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வீரர்களை இரும்புக் கம்பியால் தாக்கி படுகொலை செய்திருப்பதற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆணி பொருத்திய கம்பிகளால்தான் இந்தியப் படையினரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர் சீனப் படையினர். எவ்வளவு கேவலமான அணுகுமுறை. இதுவா படைவீரர்கள் செய்யும் போர்முறை? சீனர்களின் கோழைத் தனத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.