thippu sulthan birthday function in karnataka

பெங்களூரு, நவ. 11- கர்நாடக மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே, பா.ஜ.க.வின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திப்புசுல்தான் பிறந்ததின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திப்பு பிறந்ததின விழா

18-ம் நூற்றாண்டில் புகழ்வாய்ந்த மைசூர் மன்னராக திகழ்ந்த திப்பு சுல்தான், பிரிட்டிஷார் ஆட்சியை எதிர்த்து தீரமிக்க போராட்டம் நடத்தியவர். அவரது பிறந்த தினத்தை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 3 வருடங்களாக சிறப்பாக கொண்டாடி வருகிறது.

காங்கிரஸ் கட்சி திப்புசுல்தானை சுதந்திரத்திற்காக போராடிய தியாகி என போற்றுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போராடியவராக கருதுகிறது.

ஆனால் திப்புசுல்தான் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்றும் கொடுங்கோல் அரசன் என்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திப்பு பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பா.ஜ.க.மற்றும் இந்துத்துவா அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

இதையடுத்து ,திப்புசுல்தான் பிறந்ததின விழா நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே கொண்டாடப்பட்டது.

54,000 போலீசார் குவிப்பு

இதையொட்டி கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெங்களூரு, மங்களூரு மற்றும் குடகு நகரங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாநிலம் முழுவதும் 54,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

ஹூப்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

திப்புசுல்தான் பிறந்த தினத்தை கொண்டாடுவதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்து. ஆனால் அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.