ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் நடிகர், பெரியார் பற்றிப் பேசும்போது சிந்தித்துப் பேச வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் துக்ளக் 50ம் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையானது. அதையொட்டி எழுந்த விவாதங்களுக்குப் பதிலளிக்காமல் இருந்த ரஜினி, இன்று காலை, ’’தான் சொன்ன கருத்து சரியானதுதான். இல்லாததை சொல்லவில்லை. அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை’’ என்று தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேட்டியும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்நிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக அவசரச் செயற்குழு கூட்டத்திற்குப் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினி பேட்டி குறித்துக் கேட்கப்பட்டது. ‘’தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்றைக் கண்டிக்கதக்க வகையில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனவரி 24-ம் தேதி நடைபெறுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு நாடகம் நடத்துகிறது. தைரியத்துடன் மத்திய அரசை தட்டிக் கேட்பதற்கு அதிமுக அரசுக்கு தெம்பு இல்லை.

நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 95 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்காகப் போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும்போது யோசித்துச் சிந்தித்துப் பேச வேண்டும்'' எனத் தெரிவித்தார்.