முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையில் அனுபவித்த  வேதனைகளை பகிர்ந்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குச் சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக உறுப்பினர் நரேஷ் என்பவரை தாக்கி அரைநிர்வாணம் படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அடுத்தடுத்து 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தில் பல முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. இதனையடுத்து 19 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியான ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். இதனையடுத்து தனது பட்டினம்பாக்கம் வீட்டிற்கு வந்தவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தனர்.

தீவிரவாதிகளின் சிறையில் அடைத்தனர்

இந்தநிலையில் கைது செய்யப்பட்டது முதல் சிறையில் அடைக்கப்பட்டது வரை நடைபெற்ற சித்ரவதைகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விவரித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடியை கைப்பற்றியவரை பிடித்து கொடுத்ததற்காக தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து வீட்டில் இருந்த தன்னை கைது செய்த போலீசார் 3 மணி நேரம் சென்னையை சுற்றி காண்பித்ததாக கூறினார். எங்கே அழைத்து செல்கிறீர்கள் என்று போலீசாரிடம் பலமுறை கேட்டும் அதெல்லாம் உங்களிடம் கூறமுடியாது என போலீசார் தெரிவித்ததாகவும் ஜெயக்குமார் கூறினார். எங்கே என்னை கொண்டு சென்றனர் என்று தெரியாமல் குடும்பத்தினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் பரிதவித்ததாகவும் தெரிவித்தார்.கைது செய்யப்பட்டதில் இருந்து 3 மணி நேரமாக உணவு, தண்ணீர் கூட கொடுக்கவில்லையென தெரிவித்தவர், இதனையடுத்து அதிகாலை 2 மணிக்கு தான் நீதிமன்றத்திற்கு தன்னை அழைத்து சென்று ஆஜர் படுத்தியதாக கூறினார். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பூந்தமல்லி சிறையில் அதிகாலையில் அடைத்தாகவும் தெரிவித்தார், இந்த பூந்தமல்லி சிறைச்சாலை பொடா,தடா வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அடைக்கும் சிறையில் போலீசார் தன்னை அடைத்தாக கூறினார்.

தரையில் படுக்க வைத்தனர்

பூந்தமல்லி சிறைசாலையில் அடைக்கப்பட்ட என் அறையில் கட்டில் வசதி, தண்ணீர் வசதி எதுவும் இல்லையென்று தெரிவித்தவர் கட்டாந்தரையில் போலீசார் தன்னை படுக்க வைத்தாக கூறினார். இதனையடுத்து நான் இருந்த அறையை சுற்றிலும் சிஆர்பிஎப் காவல்துறை என 100க்குமேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து இருந்ததாகவும் கூறினார். அடுத்த நாள்போலீஸ் காவலில் இருந்து தப்பித்து ஓடிவிடுவேன் போல நினைத்து 300க்குமேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு தன்னை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றதாகவும், தீவிரவாதி போல் தன்னை போலீசார் சித்தரித்தனர் எனவும் குற்றம்சாட்டினார். இது போன்ற மிரட்டலுக்கு எப்போதும் அஞ்சபோவதில்லையென கூறிய ஜெயக்குமார், முன்பை விட அதிக வேகத்தில் திமுகவினருக்கு எதிரான தனது செயல்பாடு தொடரும் என ஜெயக்குமார் கூறினார்.