அதிமுக - பாஜக உறவில் எந்த விரிசலும் இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக - பாஜக உறவில் எந்த விரிசலும் இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் சேலத்தில் பொய்யான தகவல்களை பரப்புகிறார். அதிமுக ஆட்சியில் சேலத்தில் திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவதில் உண்மை இல்லை என்று கூறினார். மேலும் தொகுதிக்கு அதிமுக செய்த திட்டங்களை பட்டியலிட்டு விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக - பாஜக உறவில் எந்த விரிசலும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு நில அபகரிப்பும் சேர்ந்து வந்து விடும். எங்கேயாவது ஏமாந்தவர்கள் இருந்தால் அந்த நிலத்தை அவர்கள் அபகரித்து விடுவார்கள்.

அதுதான் அவர்களின் தொழில். எல்லா துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து கொள்ளை புறம் வழியாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் இந்த அரசு செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக அவர் தனது டிவிட்டர் பதிவில், சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது. காவல்துறை டிஜிபியே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம் என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்? என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.