7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவுடன் சேர்ந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக கூட்டணி இடம் பெற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார். ஆனால், இங்குள்ளவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என கடுமையாக சாடியுள்ளார். இவரது ட்வீட் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. கருத்துத் தெரிவிப்பது கூட்டணிக் கட்சியினரின் உரிமை. ஆந்திர மாநிலத்தோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு பல்வேறு திட்டங்களில் முன்னோடியாக உள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது முதலமைச்சரின் முயற்சியால் தான். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரின் ஆளுநரைச் சந்தித்தோம்; ஆளுநர் நல்ல முடிவைத் தெரிவிப்பார் என நம்புகிறோம். இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கக் காலம் தேவைப்படும்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவுடன் சேர்ந்து போராடத் தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.