* கலெக்டர் போல் கையெழுத்திட்டு, போலி காசோலை மூலம், மூன்று லட்சம் ரூபாயை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார் சுருட்டியது தெரியவந்திருக்கிறது. இது போக அரசு நிதி முப்பது லட்சத்தையும் இவர் தன் நண்பர்களுடன் இணைந்து சுருட்டியிருக்கிறார். இவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, சிறையிலடைத்தனர். - பத்திரிக்கை செய்தி

* ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் எல்லோரும் மத்தியிலும், மாநிலத்திலும் பதவிகளில் அமர்ந்து மக்களை ஆட்டிப்படைத்த ஆட்சிமுறை இன்று இல்லை. இப்போதுதான் உண்மையான மக்களாட்சி நடக்கிறது. துறைதோறும் புதிய சாதனைகளை படைத்து, தேசிய அளவில் விருதுகளையும் பெற்று வருகிறது இந்த அரசு. - அமைச்சர் ஜெயக்குமார்

* புதிய அதிபர் கோத்தப்பய ராஜபக்‌ஷேவை கண்டு தமிழக மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது என்று அதிபர் சார்பாக நான் உத்தரவாதம் தருகிறேன். கடல் சார் பிரச்னைகள் இருந்தால், தமிழக மீனவர் சங்க நிர்வாகிகள் என்னிடம் தொலைபேசியில் பேசலாம். - டக்ளஸ் தேவானந்தா

* உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளுங்கட்சி விரும்பவில்லை. ஆனால், நாங்கள் சுயேட்சையாக கூட போட்டியிட தயாராக உள்ளோம். எதிரிகளையும், துரோகிகளையும் தோற்கடித்து, ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய முழு மூச்சாக செயல்படுகிறோம். 2021ல் அ.தி.மு.க. - தி.மு.க. இல்லாத ஆட்சி உருவாகும். - தினகரன்

* விடுதலைப் புலிகளால் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது என லோக்சபாவில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேசியுள்ளார். கூட்டணி கட்சி தலைவரை குளிர்விக்கும் விதமாக பேசிய அவர், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு உரிய பாடம் கற்பிப்போம். - சீமான்

* நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழக அரசியலில் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர். அனுபவம் மட்டுமே அரசியல் வெற்றியை தராது. ஏனென்றால் நான் அவர்களை விட அரசியலில் மூத்தவன். அதிர்ஷ்டமும் வேண்டும்.- டி.ராஜேந்தர்.

* டில்லியில் பிரதமரை சந்தித்து, எங்களின் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தவர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்! என வலியுறுத்தினேன். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது மதுரையில் இது குறித்து பேசிய, பிரதமர் மோடிக்கு இதை நினைவுபடுத்தினேன். - ஜான்.பாண்டியன்

* உள்ளாட்சி தலைவர் பதவிகள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆள் கடத்தல், குதிரை பேரத்துக்கு இது வழி வகுக்கும். தேர்தல் அமைதியாக நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. -திருமாவளவன். 

* ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அனைவரும் சகோதர - சகோதரிகளாக பழகி வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அணி திரள வேண்டும். - பழ.நெடுமாறன்.