There is impact because of rajini to viduthalai siruthai team

மத்திய அரசின் உளவு துறை சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே, ரஜினி அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்று மத்திய அரசின் உளவுத்துறை சார்பில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

அதில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட பிறகே, அரசியலில் இறங்கலாம் என்று அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து, தமிழக உளவுத்துறையின் சார்பிலும் ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

அதில், அவருக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது?, அவர் தனி கட்சி ஆரம்பித்தால், மற்ற கட்சிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையின் முடிவுகள், ஏற்புடையதாக இல்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

தமிழக உளவுத்துறை சர்வேயின்படி, வன்னியர்கள் மற்றும் தலித் மக்கள் மத்தியில், ரஜினிக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால், பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிக பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திமுகவின் கணிசமான உறுப்பினர்கள் ரஜினியோடு இணைவார்கள் என்றும். ஆனால், அதிமுகவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று, மாநில உளவுத்துறையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரஜினிக்கு மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு இருப்பது உண்மையே. அவர் கட்சி ஆரம்பித்தால், பாமக, விடுதலை சிறுத்தைகள், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மைதான்.

அதே சமயம், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு ரஜினியால், வாக்குகளை பிரிக்க முடியுமா? என்பது சந்தேகமே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மேலும், அதிமுகவுக்கு ரஜினியால், பாதிப்பு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தற்போதுள்ள நிலையில், ரஜினி எதிர்ப்பை தீவிரமாக தொடர்ந்து கடைப்பிடித்து வரும், பாமக கடந்த தேர்தலில் கூட 6 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல், விடுதலை சிறுத்தைகள் வாக்கு வங்கியிலும் கடந்த தேர்தலில் பெரிய அளவில் சரிவு ஏற்படவில்லை.

சர்வே முடிவுகள் சொல்வது போல, ரஜினிக்கு வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு இருந்தாலும், அது பாமக, விடுதலை சிறுத்தைகளின் செல்வாக்கை குறைத்து விடமுடியாது என்றும், அந்த கட்சியினர் கூறுகின்றனர்.

மேலும், சரியான தலைவரோ, வழிகாட்டியோ இல்லாத நிலையில், ஆட்சி என்ற ஒன்றை மட்டுமே வைத்து கொண்டு, உழன்று வரும் அதிமுக வுக்குதான் ரஜினியால் அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், ஆட்சியாளர்களை திருப்தி படுத்துவதற்காக, அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை என்ற ஒரு மாய தோற்றத்தை, மாநில உளவுத்துறை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பாமக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, விருத்தாச்சலம் என்ற ஒரு தொகுதியில், விஜயகாந்த் வெற்றி பெறுவதற்கு, பண்ருட்டியாரின் உதவி என்று பயன்பட்டது. ஆனால், மற்ற தொகுதிகளில் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

அடுத்த தேர்தலில் அப்படி ஒரு சூழல் வந்தால், ரஜினியை தோற்கடிக்க, திமுக, அதிமுக, பாமக என அனைத்து கட்சிகளும், ஒரு சில தொகுதிகளில் கை கோர்க்க தயங்க மாட்டார்கள் என்பது உறுதி என்கின்றனர் ரஜினி எதிர்ப்பாளர்கள்.

அரசியலில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு எதிரியை வீழ்த்த மற்ற எதிரிகள் அனைவரும், ஒரு சில தொகுதிகளில் கை கோர்க்கலாம் என்பது கடந்த கால வரலாறு சொல்லும் பாடம்.